குற்றவியல் வழக்கறிஞருக்குத் துணைபுரியும் புகைப்படக் கலை

குற்றவியல் வழக்கறிஞருக்குத் துணைபுரியும் புகைப்படக் கலை

2 mins read
ecb81a5a-ab2b-440e-890c-cf369bd764d8
சட்டத்துறையிலும் புகைப்படக் கலையிலும் ஒருசேர ஆர்வத்துடன் செயல்படுகிறார் 65 வயது வழக்கறிஞர் திரு செல்வா நாயுடு. - படம்: தமிழ் முரசு

படித்தத் துறையில் பணியாற்றிக்கொண்டு பிடித்தத் துறையிலும் ஒருசேர பயணம் செய்வோர் நம்மிடையே ஏராளம். அத்தகையோரில் ஒருவர், சிங்கப்பூரின் முக்கிய வழக்குகளைக் கையில் எடுத்து வாதாடியுள்ள வழக்கறிஞர் செல்வா நாயுடு.

1987இல் சட்டத் துறைக்குள் கால் எடுத்துவைத்த 65 வயது திரு செல்வா, புகைப்படக் கலைப் பிரியர்.

என்றாவது ஒரு நாள் அந்தக் கலை, குற்றவாளி என்று நம்பப்படும் ஒருவரை மரண தண்டனையிலிருந்து விடுவிக்கும் என்று திரு செல்வா சிறிதேனும் யோசித்திருக்கவில்லை.

போதைப்பொருளைக் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர், தமது வழக்குத் தொடர்பில் மேல்முறையீடு செய்தார். ஆடவரின் தரப்பில் வாதாடினார் திரு செல்வா.

சிங்கப்பூருக்குள் புகுந்த காரின் பின்பகுதியில் (boot) சந்தேக நபர் போதைப்பொருளைப் பதுக்கினார் என்பதுதான் குற்றச்சாட்டு. அதை நேரில் பார்த்ததாகவும் அரசாங்கத் தரப்பில் ஒருவர் சாட்சியம் அளித்தார்.

மலேசியாவின் ஜோகூர் பாருவில், போதைப்பொருளைக் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர், காரின் பின்பகுதியில் அவற்றைப் பதுக்கி வைத்ததாகச் சாட்சியம் அளித்தவர் கூறினார். அதைக் கேட்ட திரு செல்வா சம்பவ இடத்துக்கே நேரில் சென்றுவிட்டார்.

புகைப்படக் கலைஞராக, நுணுக்கமான, சட்டென கண்ணுக்குப் புலப்படாத தகவல்களைக் கண்டறியும் திறனை 12 வயதிலிருந்து வளர்த்துக்கொண்டவர் திரு செல்வா. அந்தத் திறன் இப்போது அவருக்குக் கைகொடுத்தது.

நீதிமன்றத்தில் தமது கட்சிக்காரருக்கு எதிராகச் சாட்சியம் அளித்தவர் சொன்ன தகவல்கள் சற்று முரணாக இருப்பதை உணர்ந்தார் திரு செல்வா. போதைப்பொருள் பதுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்ட காரை அவர் ஆராய்ந்தார்.

காரின் பின்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒரு ரகசியமான பகுதியில் பதுக்கப்பட்டிருந்தது. அந்த ரகசியப் பகுதியைப் பயணிகள் அமரும் பின் இருக்கை வழியாகத்தான் எட்ட முடியும் என்பது பின்னர் கண்டறியப்பட்டது.

நடந்ததாகக் கூறப்பட்ட கடத்தல் சம்பவத்தை மீண்டும் சித்திரித்ததுடன் நண்பர் ஒருவர் எடுத்த புகைப்படங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து குற்றவாளி என்று நம்பப்படுபவர் உண்மையில் நிரபராதி என்பதைத் திரு செல்வா நிரூபித்தார். குற்றவாளியும் மரண தண்டனையிலிருந்து தப்பினார். நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

இதேபோல வெவ்வேறு வழக்குகளில் உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவர புகைப்படக் கலை திரு செல்வாவுக்கு உறுதுணையாக இருந்தது.

திரு செல்வாவைப் பொறுத்தவரை சட்டத்துறைக்கும் புகைப்படக் கலைக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இரண்டிற்கும் உன்னிப்பான கவனமும் பொறுமையும் தேவை.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் கல்வியை முடித்த திரு செல்வாவுக்குச் சட்டத்துறை புதிதல்ல.

திரு செல்வாவின் தந்தை, தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தில் 56 ஆண்டுகள் சட்ட உதவியாளராகச் சேவையாற்றியவர். அவரது இரண்டு சகோதரிகளும் வழக்கறிஞர்கள்.

‘சட்டம்’, ‘வழக்கு’, ‘விசாரணை’, ‘குற்றவாளி’, ‘நிரபராதி’, ‘நீதிமன்றம்’, ‘மேல்முறையீடு’, ‘அரசாங்கத் தரப்பு’ போன்ற சொற்கள் இடைவிடாமல் எதிரொலிக்கும் வீட்டில் வளர்ந்தவர் திரு செல்வா.

புகைப்படக் கலைமீது அசைக்கமுடியாத நாட்டம் இருந்தபோதும் சட்டத் துறையில் விருப்பப்பட்டே கால் வைத்தார் திரு செல்வா.

‘அட்வோகேட் & சொலிசிட்டர்’ சட்ட நிறுவனத்தில் தமது பணியைத் தொடங்கிய திரு செல்வா, இன்று குற்றவியல் வழக்கறிஞராகத் தனக்கென முத்திரைப் பதித்துவருகிறார்.

‘தப்லா’ வார இதழில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்
குறிப்புச் சொற்கள்