லிட்டில் இந்தியாவில் உள்ள தேக்கா நிலையத்துக்கு வெளியே ஒரு நெரிசலான நடைபாதையில் நவம்பர் 2ஆம் தேதி பிற்பகல் குறைந்தது நான்கு பெண்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். அதன் காரணமாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
நவம்பர் 4ஆம் தேதி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு காணொளியில், வெள்ளைச் சட்டை அணிந்த ஒரு பெண் தரையில் படுத்துக் கிடந்ததையும், அவருக்கு உதவ இரண்டு பெண்கள் முயற்சி செய்வதையும் காட்டியது.
அப்போது சிவப்புச் சட்டையும் ஜீன்ஸ் காற்சட்டையும் அணிந்த ஒரு பெண் ஓடிவந்து, அவர்களைத் தள்ளிவிட்டு, கீழே விழுந்த பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்தார்.
பின்னர் அருகில் இருந்த மற்றவர்கள் பெண்களைப் பிரித்துவிட்டு கைகலப்பை முடிவுக்குக் கொண்டு வந்தனர். கைகலப்புக்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று மதர்ஷிப் செய்தித்தளம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) கூறியது
நவம்பர் 2ஆம் தேதி மாலை 6 மணியளவில் தேக்கா நிலையத்துக்கு வெளியே உள்ள புக்கிட் தீமா ரோட்டை ஒட்டிய ஒரு நடைபாதையில் கைகலப்பு மூண்டதாக ஷின் மின் நாளிதழ் நேர்கண்ட கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
கைகலப்பு எப்படி தொடங்கியது என்று தனக்குத் தெரியாது என்று ஒரு கடைக்காரர் கூறினார். ஆனால் பின்னர் பல காவல்துறை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்ததைக் கேள்விப்பட்டதாகவும் கூறினார்.
குறிப்பாக, வார இறுதிகளில் அங்கு கைகலப்புகளும் வாய்ச்சண்டைகளும் அடிக்கடி நிகழ்வதைத் தாங்கள் பார்த்திருப்பதாக மேலும் சில வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அவ்வாறு நடக்கும்போது காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்படும் என்றும் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
சம்பாவ நாளன்றே கைகலப்பு பற்றி தங்களிடம் புகார் அளிக்கப்பட்டது என்றும் அது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது என்றும் காவல்துறை தெரிவித்தது.

