தொழிற்சங்க இயக்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) தலைமைச் செயலாளருக்கும் கூடுதல் ஆதரவு கிடைக்கும்போது அவர்களால் ஊழியர்களுக்காக நன்கு குரல் கொடுக்க முடியும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தமது தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் செயல் கட்சியின் தொழிற்சங்க இயக்க வேட்பாளர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான தேவை இல்லை என்று குறிப்பிட்டதற்கு, அமைச்சர் சான் பதிலடி தந்தார் .
மசெகவின் தஞ்சோங் பகார் குழுத்தொகுதி வேட்பாளர்களும் ராடின் மாஸ், குவீன்ஸ்டவுன் தனித்தொகுதி வேட்பாளர்களும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) ரெட்ஹில் உணவு நிலையத்தில் தொகுதி உலா மேற்கொண்டனர்.
தஞ்சோங் பகார் குழுத்தொகுதி மசெக அணிக்குத் தலைமைதாங்கும் அமைச்சர் சான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
முன்னாள் என்டியுசி தலைமைச் செயலாளருமான அவர், மசெகவின் மனிதவள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழியர்களின் தேவைகளை அமைதியாகப் பூர்த்தி செய்கின்றனர் என்றும் அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசுவதை வைத்து மட்டும் எடைபோட வேண்டாம் என்றும் கூறினார்.
“இதில் கடுமையான உழைப்பு அடங்கியுள்ளது. ஒவ்வொரு என்டியுசி அதிகாரியும் முத்தரப்பு பங்காளிகள், நிறுவனங்கள் ஆகியோருடன் இணைந்து ஊழியர்களுக்காகக் குரல்கொடுத்து வருகின்றனர். அதுபற்றிக் குறைசொல்பவர்களுக்கு அந்தச் செயல்முறையின் முழு விவரம் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்,” என்றார் திரு சான்.
சிங்கப்பூரர்களுக்குக் குரல் கொடுக்க வெறும் முழக்கவரிகளை மட்டும் வைத்தால் போதாது என்ற அமைச்சர் சான், சிங்கப்பூரர்கள் தங்களின் தேவைகளை அறிந்து நன்கு செயல்படும் கட்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“வேலைகள், சம்பளம், விலைவாசி ஆகிய மூன்றுதான் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய விவகாரங்களாக உள்ளன. எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் பரிந்துரைகளால் இவற்றைத் தீர்க்க முடியுமா? அவர்களின் பரிந்துரைகளால் சிறந்த முதலீடுகளைக் கவர்ந்து, ஊழியர்களுக்கு நல்ல சம்பளங்களை வழங்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் சான், சிங்கப்பூரர்களை நன்கு சிந்தித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
மசெக சார்பில் ராடின் மாஸ் தனித்தொகுயில் மும்முனை போட்டி காணும் திரு மெல்வின் யோங்கும், குவீன்ஸ்டவுன் தனித்தொகுதியில் களமிறங்கும் திரு எரிக் சுவாவும் தத்தம் தொகுதி குடியிருப்பாளர்களுக்கு முன்வைத்துள்ள திட்டங்கள் பற்றி செய்தியாளர்களிடம் விளக்கினர்.

