பிக்கல்பால் போட்டி: $100,000க்கும் அதிகமான பரிசுகள்

பிக்கல்பால் போட்டி: $100,000க்கும் அதிகமான பரிசுகள்

2 mins read
4240de88-8f8d-4f54-a4a8-bd67896aeb54
அனைத்துப் போட்டிகளும் இருவர் பங்கேற்கும் வகையில் நடைபெறும். மேலும் அணிகளை இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் அல்லது ஒரு கலப்பு ஜோடி என எந்தப் பாலினக் கலவையிலும் அமைக்கலாம். - படம்: ஓசிபிசி

முதன்முறையாக நடத்தப்படும் ஓசிபிசி-கிரேட் ஈஸ்டர்ன் பிக்கல்பால் போட்டியில் $100,000க்கும் அதிகமான மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள், ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூலை 26) அறிவித்துள்ளனர்.

தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய பிக்கல்பால் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் இப்போட்டி, அக்டோபர் 23 முதல் 25ஆம் தேதி வரை காலாங்கில் உள்ள ஓசிபிசி அரங்கில் நடைபெறும். இதில் ஏறத்தாழ 1,600 ஆட்டக்காரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்கநிலையாளர், பொதுப் பிரிவு, பேங்க் ஆஃப் சிங்கப்பூர் பெருநிறுவன சவால், அழைக்கப்பட்டவர்களுக்கான பேங்க் ஆஃப் சிங்கப்பூர் சிறப்புப் போட்டி என நான்கு பிரிவுகளில் போட்டிகள் இடம்பெறும். இரட்டையர் பிரிவில் அனைத்துப் பாலினச் சேர்க்கைகளும் அனுமதிக்கப்படும்.

தொடக்கநிலையாளர் பிரிவில் வெற்றிபெறுவோருக்கு $900 ரொக்கமும், $6,000 மதிப்புள்ள சுபாரு கார் வாடகைச் சலுகையும் வழங்கப்படும்.

பொதுப் பிரிவில் வெற்றிபெறும் இணையருக்கு $1,500 ரொக்கமும், $16,000 மதிப்புள்ள கார் வாடகைச் சலுகையும் கிடைக்கும்.

போட்டிக்கான முன்பதிவு ஜூலை 27ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குத் தொடங்குகிறது.

ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை முன்பதிவு செய்வோருக்குச் சலுகைக் கட்டணமாக ஒரு குழுவிற்கு $132 வசூலிக்கப்படும். செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை வழக்கமான கட்டணமாக $148 விதிக்கப்படும்.

ஓசிபிசி அட்டைதாரர்களுக்கும் கிரேட் ஈஸ்டர்ன் காப்புறுதிச் சந்தாதாரர்களுக்கும் கூடுதலாக 10 விழுக்காடுக் கழிவு உண்டு.

சமூக ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட, பலவீனமான, நலிவடைந்த முதியவர்களுக்கு உதவும் ஒரு சமூக சேவை அமைப்பான ‘கேர் கார்னர் சீனியர்ஸ் சர்வீசஸ்’ உடனான இரண்டு ஆண்டு பங்காளித்துவத்தின் மூலம், ஓசிபிசி இந்த விளையாட்டை முதியவர்களுக்கும் விரிவுபடுத்துகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ், 100 மூத்த குடிமக்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு இலவச பிக்கல்பால் பயிற்சி அளிக்கப்படும். இதில் ஒவ்வோர் ஆண்டும் 50 பேர், தேசிய விளையாட்டரங்கில் உள்ள கிரேட் ஈஸ்டர்ன் புரோமனேடில் அமைந்துள்ள இருபயன்பாட்டு மைதானங்களில் நடைபெறும் 10 பயிற்சிகளைக் கொண்ட நான்கு மாத கால திட்டத்தில் பங்கேற்பார்கள்.

குறிப்புச் சொற்கள்
ஓசிபிசிஇரட்டையர்கட்டணம்