சிங்கப்பூரில் புறாக்களைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்ற நகர மன்றங்கள் மேற்கொண்ட முன்னோடித் திட்டத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னோடித் திட்ட நடவடிக்கைகளின் காரணமாக, அங் மோ கியோ, பீஷான்-தோ பாயோ, தஞ்சோங் பகார் ஆகிய நகர மன்றங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் புறாக்களின் எண்ணிக்கைக் கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துவிட்டது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் கிடைத்துள்ள பலன்கள் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதால், புறா கட்டுப்பாட்டுத் திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேலும் மூன்று நகர மன்றங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் அறிவித்து உள்ளார்.
ஜாலான் புசார், மார்சிலிங்-இயூ டீ, நீ சூன் ஆகிய தொகுதிகளுக்கு அந்தத் திட்டம் நீட்டிக்கப்படும் என்றும் ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை அந்தப் பகுதிகளில் திட்டம் நடப்பில் இருக்கும் என்றும் அவர் செவ்வாய்க்கிழமை (மே 20) தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
புறாக்கள் அதிகமாகக் காணப்படும் பகுதிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் புறா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கான வட்டாரம் தேர்ந்து எடுக்கப்படுவதாகவும் அவர் அந்தப் பதிவில் தெரிவித்து உள்ளார்.
புதிய பகுதிகளிலும் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு எதிர்பார்த்த பலன் கிடைத்தால் சிங்கப்பூர் முழுவதும் அந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படக் கூடும் என்றார் திரு டான்.
இதற்கிடையே, முதற்கட்ட புறா கட்டுப்பாட்டு முன்னோடித் திட்டம் 2024 ஜூலை முதல் 2025 மார்ச் வரை நடப்பில் இருந்ததாக தேசிய பூங்காக் கழகம் தெரிவித்து உள்ளது.
அந்தத் திட்டத்தின் விளைவாக அங் மோ கியோ, பீஷான்-தோ பாயோ, தஞ்சோங் பகார் ஆகிய வட்டாரங்களில் புறக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50 விழுக்காடு குறைந்துவிட்டதாகவும் அது குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், 2024 அக்டோபர் முதல் 2025 மார்ச் வரை, புறாக்களால் தொல்லை இருப்பதாகத் தெரிவிக்கப்படும் புகார்களும் எதிர்பார்க்கப்பட்ட சராசரி அளவைக் காட்டிலும் 34 விழுக்காடு குறைந்துவிட்டதாக செவ்வாய்க்கிழமை (மே 20) கழகம் கூறியது.
புறாக்களுக்கு உணவளிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடைபெறும் இடங்கள் கண்காணிக்கப்பட்டதில் 50 சம்பவங்களில் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.