வெளிப்புற குளிரூட்டி சாதனத்திற்கான உலோகத் தாங்கிகளில் தடுப்பு வலைகள்

2 mins read
இரண்டு வீவக புளோக்குகளில் சோதனை முயற்சி
184a7d65-4559-4b71-a0fd-5fe104f1c8b1
குளிரூட்டி தாங்கிகளில் புறாக்கள் கூடு கட்டுவது குறித்து குடியிருப்பாளர்கள் பொதுவாக நகர மன்றங்களிடம் புகார் அளிப்பதாக வீவக தெரிவித்தது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிப்புற குளிரூட்டி சாதனத்தின் தாங்கிகளில் புறாக்கள் இறங்கி கூடு கட்டுவதைத் தடுக்க ஒரு வலையைப் பொருத்தும் ஒரு திட்டத்தைச் சோதித்துப் பார்க்க, பொங்கோல், தோ பாயோ நகரங்களில் உள்ள இரண்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்குகள் தயாராக உள்ளன.

டிசம்பர் 1 அன்று, வெளிப்புற குளிரூட்டி தாங்கிகளில் வலையைப் பொருத்துதலை வடிவமைத்தல், விநியோகித்தல், நிறுவுவதற்கான ஒப்பந்தப் புள்ளிக்கு வீவக அழைப்பு விடுத்தது. இது 35 புளோக்குகளில் சோதிக்கப்படும்.

அரசாங்க கொள்முதல் இணையவாசலான GeBizல் வெளியிடப்பட்ட ஒப்பந்தப் புள்ளி ஆவணங்கள், அந்த வலையானது தீத் தடுப்பு பொருள்களால் செய்யப்பட வேண்டும் என்றும் பராமரிப்பு நோக்கங்களுக்காகத் திறக்கக்கூடிய மேல் மற்றும் பக்கவாட்டுத் திறப்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

குளிரூட்டி சாதனத்திற்குப் போதுமான காற்றோட்டமும் இருக்க வேண்டும். மேலும் துணிகளை உலர்த்தும் அடுக்குகளுக்கு இடையூறாக இருக்கக்கூடாது. இவை பொங்கோலில் 15 புளோக்குகளிலும், தோ பாயோவில் 20 புளோக்குகளிலும் சோதனை செய்யப்படும்.

குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைப்பதற்கும், வெவ்வேறு குளிரூட்டி தாங்கிகளில் அமைப்புகளும் கட்டமைப்புகளும் பறவைகள் கூடு கட்டுவதால் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கும் இந்த ஆய்வை நடத்துவதாக வீவக, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு 2026ஆம் ஆண்டின் முற்பாதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குளிரூட்டி விளிம்புகளில் புறாக்கள் கூடு கட்டுவது குறித்து குடியிருப்பாளர்கள் பொதுவாக நகர மன்றங்களிடம் புகார் அளிப்பதாக வீவக தெரிவித்தது. நகர மன்றங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பொங்கோல் மற்றும் தோ யாயோ ஆகிய நகரங்கள் ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இந்தத் திட்டம் 13 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும் என்று அறியப்படுகிறது.

இரண்டு புளோக்குகளுக்கு விரிவுபடுத்தப்படுவதற்கு முன்பு, வீவகவின் கட்டட ஆய்வு நிலையத்தில் உள்ள ஒரு மாதிரி வீட்டில் வலை அமைத்தல் சோதிக்கப்படும்.

இது, முதலில் வீவகவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வீடுகளில் நிறுவப்படும். மேலும் வீட்டின் குளிரூட்டி தாங்கிகள் சுத்தம் செய்யப்பட்டு, பறவைக் கூடுகள், குஞ்சுகள் அல்லது முட்டைகள் மனிதாபிமான முறையில் அகற்றப்படும்.

வலை அமைத்தல் தீர்வு ஓர் ஆண்டுக்குக் கண்காணிக்கப்பட்டு, பின்னர் எஞ்சியுள்ள வீடுகளில் அமைக்கப்படும்.

சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள பறவைகளின் எண்ணிக்கை மற்றும் இனங்களை ஒப்பந்ததாரர் ஆய்வு செய்ய வேண்டும். குடியிருப்பாளர்களின் உணவிலிருந்து பெறப்பட்ட உணவு ஆதாரங்கள் மற்றும் வலைப் பொருத்துதலுக்கு முன்னும் பின்னும் பறவைகளின் இருப்பிடம் போன்றவற்றை ஆவணப்படுத்த வேண்டும்.

ஆய்வுக்கு முன்னும் பின்னும், குடியிருப்பாளர்கள் மற்றும் நகர மன்றங்களுடன் கருத்தறியும் ஆய்வுகளையும் நேர்காணல்களையும் வீவக நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்