பூன்லே எம்ஆர்டி நிலைய வளாகத்தில் குப்பை அளவுக்கு அதிகமாகக் குவிக்கப்பட்டு அது, இணையத்தில் படங்களுடன் வெளியாகி மக்களிடையே சர்ச்சையைக் கிளப்பியது.
அதனைத் தொடர்ந்து, அந்த வட்டாரத்தில் கண்காணிப்புப் பணிகள் அதிகரித்துள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) தெரிவித்தது.
குப்பைகள் கண்மூடித்தனமாக அங்கு கொட்டப்படுவதைத் தடுக்க, வாரியம் அதிகாரிகளை பணியமர்த்தியுள்ளது. அவர்கள் அங்கு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதிமுதல் குப்பை போடுதல், புகைபிடித்தல் போன்ற 170க்கும் மேற்பட்டக் குற்றங்களுக்கு அபராதமும், எச்சரிக்கைக் கடிதங்களும் அப்பகுதியில் பலருக்குக் கொடுக்கப்பட்டதை வாரியம் குறிப்பிட்டது.
தூய்மைகேட்டிற்கு எதிரான நடவடிக்கையின் அங்கமாக அங்குள்ள பங்காளிகளுடன் இணைந்து அதிகமான குப்பைத் தொட்டிகள் நடைபாதைகளில் வைக்கப்பட்டன. அவை ஜூரோங் பாயின்ட் மால் கடைத்தொகுதிக்கும் பூன்லே எம்ஆர்டி நிலையத்துக்கும் இடையே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உதவும் என்று வாரியம் கூறியது.
மே மாதம் 30ஆம் தேதி பூன்லே எம்ஆர்டி நிலையத்தில் கூரையுடன் உள்ள நடைபாதையில் குப்பை அங்குமிங்கும் சிதறிக் கிடப்பதை ரெடிட் என்ற சமூக ஊடகத்தின் பயனாளர் ஒருவர் பகிர்ந்தார்.
பேரங்காடி வண்டியில் குவிந்திருந்த குப்பையில் பயன்படுத்திய உபகரணங்கள், உணவுக் கழிவுகள், பைகள், கண்ணாடி போத்தல்கள், சிகரெட் துண்டுகள் என காண்பதற்கு அருவருப்பான வகையில் பல அசுத்தமான பொருள்கள் அங்குமிங்கும் சிதறிக் கிடந்தன.

