குடும்பத்தலைவியான 49 வயது நசீரா பானு, முதன்முறையாக ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்கிறார். அவரையும் அவரது கணவர் முஹம்மது புன்யாமீனையும் வழியனுப்ப உற்றார், உறவினர்கள் வியாழக்கிழமை பிற்பகல் சாங்கி விமான நிலையத்தின் முதல் முனையத்தில் திரண்டனர்.
ஆவலுடன் இந்தத் தருணத்திற்காகத் தாங்கள் இருவரும் ஓர் ஆண்டாக ஆயத்தமாகி வந்ததாக மருந்தகத்துறையில் பணியாற்றும் நசீரா பானு கூறினார்.
“இதற்கானச் செலவுகளுக்கும் விடுப்புக்கும் ஏற்பாடு செய்தும் முயிஸ் தெரிவித்த நெறிமுறைகளைப் பின்பற்றியும் நாங்கள் தயாராகி வந்தோம்,” என்று கூறினார்.
கணவர் புன்யாமீன் ஏற்கெனவே தனது 35ஆம் வயதில் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்தபோதும் மனைவியுடன் முதன்முறையாகச் செல்வதில் மகிழ்ச்சி அடைவதாகச் சொன்னார்.
இஸ்லாத்தின் தலையாய ஐந்து கடமைகளில் ஹஜ் பயணமும் அடங்கும். சிங்கப்பூரும் சவூதி அரேபியாவும் செய்துகொண்ட ஓர் ஒப்பந்தம் மூலமாக இந்த ஆண்டு சிங்கப்பூரிலிருந்து 900 பேர் இந்தப் பயணத்துக்கான வாய்ப்பைப் பெற்றனர்.
மொத்தம் 43 பேர், மே 22ஆம் தேதி, ஹலிஜா டிராவல்ஸ் ஏற்பாட்டில் மூன்று அதிகாரிகளுடன் ஸ்கூட் விமானச் சேவையில் சிங்கப்பூரிலிருந்து ஜெட்டா விமான நிலையத்திற்குச் சென்றனர்.
மற்றவர்கள் கிட்டத்தட்ட 10 விமானச் சேவைகள் மூலம் மெக்கா செல்வர் என்று கூறப்பட்டது.
திருவாட்டி நசீராவைப் போலவே, முதன்முறையாக ஹஜ் பயணம் செல்லும் நற்பேற்றை நினைத்து மகிழ்வதாக 64 வயது முகமது இக்பால், தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
2013ல் உம்ரா பயணம் மேற்கொண்டு மெக்காவுக்குச் சென்றிருந்தபோதும் தாம் இப்போதுதான் முதன்முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்வதாக அவர் கூறினார்.
“13 ஆண்டுகளாகக் காத்திருந்த பின்னர் முயிஸ் அமைப்பிடமிருந்து எனக்கும் என் மனைவிக்கும் அழைப்பு வந்தது. கட்டணம் செலுத்த இயலுமெனில் பயணத்தை மேற்கொள்வது எங்கள் கடமை. நபிகள் நாயகத்தின் கட்டளைகளைச் சமய வகுப்புகளின்வழி புரிந்துகொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.
அவர்களை வழியனுப்ப குடும்பத்தாரும் உறவினர்களும் சாங்கி விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.