மூத்த குடிமக்களைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் முன்னோடித் திட்டம் விரிவுபடுத்தப்படும்

மூத்த குடிமக்களைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் முன்னோடித் திட்டம் விரிவுபடுத்தப்படும்

2 mins read
be5af11c-9f01-471a-8777-8a6e1d2d3111
சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் அடித்தளத் தலைவர்களுடன் இணைந்து மவுண்ட்பேட்டன் சமூக மன்றத்தைத் திறந்து வைத்தார். - படம்: ஆயிஷா ரோஸ்

ஜாலான் சத்துவில் அமைந்துள்ள புதிய மவுண்ட்பேட்டன் சமூக மன்றத்தை, சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங், சனிக்கிழமை (ஏப்ரல் 4) அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.

அரசாங்கத்தையும் மக்களையும் இணைப்பதும், மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவதும், இனம், மொழி, சமயம் கடந்து அனைவரையும் ஒன்றிணைக்க சமூக மன்றங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்தச் சமூக மன்றம், மவுண்ட்பேட்டன் சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள முதியவர்களுக்கும், இளம் குடும்பங்களுக்கும் உகந்த முறையில் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மவுண்ட்பேட்டன் சமூக மன்றத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட குடியிருப்பாளர்கள்.
மவுண்ட்பேட்டன் சமூக மன்றத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட குடியிருப்பாளர்கள். - படம்: ஆயிஷா ரோஸ்

முதியவர்களைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் சமூகத்துடன் இணைந்து, சுற்றுப்புறங்களில் அர்த்தமுள்ள வகையில் ஈடுபடுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ‘நெய்பர்ஹுட் காக்கிஸ்’ திட்டம் மவுண்ட்பேட்டன் உட்பட மேலும் பல தொகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று திறப்பு விழாவில் அமைச்சர் எட்வின் டோங் அறிவித்தார்.

புதிய மவுண்ட்பேட்டன் சமூக மன்றம்.
புதிய மவுண்ட்பேட்டன் சமூக மன்றம். - படம்: ஆயிஷா ரோஸ்

“சிங்கப்பூர் ஒரு ‘முதிர்ந்த சமூகமாக’ மாறி வரும் வேளையில், முதியவர்கள் ஆரோக்கியமாகவும், உள ரீதியாகச் சுறுசுறுப்பாகவும் விளங்க வழிவகை செய்ய வேண்டும். முதியவர்களைச் சமூகத்திடமிருந்து உதவி பெறுபவர்களாக மட்டும் பார்க்காமல், சமூகத்திற்குப் பங்களிப்பவர்களாக மாற்ற வேண்டும் என்பது எங்கள் நோக்கம்,” என்றார் அமைச்சர்.

2024ல் தொடங்கப்பட்ட இந்த ‘நெய்பர்ஹுட் காக்கிஸ்’ திட்டம், 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியவர்களும், 50 முதல் 59 வயது வரையிலானோரும் ஒரு மணி நேரத்திற்குள் முடிக்கக்கூடிய எளிய பணிகளை மேற்கொள்ள வழிவகுக்கிறது.

தனியாக வசிக்கும் முதியவர்களுக்கு உணவு வழங்குதல், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்களை விநியோகித்தல், சமூகக் குளிர்சாதனப் பெட்டிகளில் பொருள்களை நிரப்புதல் ஆகியவை இவற்றில் அடங்கும். நிறைவுசெய்த ஒவ்வொரு பணிக்கும் முதியவர்களுக்கு $2 வழங்கப்படும்.

இதுவரை இத்திட்டத்தில் 1,400க்கும் மேற்பட்ட முதியவர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்ட நடவடிக்கைகளில் 30,000க்கும் அதிகமான அக்கம்பக்கப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சமூகத்திற்குத் திரும்பக் கொடுக்கும் செயலில் பங்களிப்பாளர்களாக மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மவுண்ட்பேட்டன் தொகுதியை உள்ளடக்கிய ‘நெய்பர்ஹுட் காக்கிஸ்’ திட்டத்தின் விரிவாக்கம், முதியவர்களின் நலனை மையமாகக் கொண்ட திட்டங்களைக் கொண்டுள்ள புதிய மவுண்ட்பேட்டன் சமூக மன்றத்தின் திறப்பு விழாவிற்குப் பக்கபலமாக அமைகிறது.

மூத்த குடிமக்கள் விளையாடிய ‘சீட்டட் ஃபுளோர்பால்’ ஆட்டத்தைப் பார்வையிட்டார் அமைச்சர் எட்வின் டோங் (நடுவில்).
மூத்த குடிமக்கள் விளையாடிய ‘சீட்டட் ஃபுளோர்பால்’ ஆட்டத்தைப் பார்வையிட்டார் அமைச்சர் எட்வின் டோங் (நடுவில்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதிய சமூக மன்றத்தில் ‘ஜிம் டானிக்’ எனும் முதியவர்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் உள்ளது. இதில் பாதுகாப்பான வகையில் உடலை வலிமைப்படுத்த உதவும் ஹைட்ராலிக் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், இந்தச் சமூக மன்றம் ‘சீட்டட் ஃபுளோர்பால்’ என்ற அமர்ந்து விளையாடும் தரைப்பந்து போன்ற விளையாட்டுகளை முன்னெடுக்கும். இவற்றில் வேறுபட்ட உடல்திறன் கொண்ட முதியவர்கள் பாதுகாப்பாகப் பங்கேற்க முடியும்.

“இந்த அழகான புதிய இடத்தைச் சாத்தியமாக்கக் கடினமாக உழைத்த அடித்தள ஆலோசகர் கோ ஸீ கீக்கும், தொண்டுழியர்களுக்கும் எனது நன்றி,” என்று அமைச்சர் எட்வின் டோங் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்