தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பைனியர் தனித்தொகுதியை வெல்ல வாய்ப்புள்ளது: சிமுக வேட்பாளர்

2 mins read
29e2fcfa-51a9-4e1f-989e-d84182e1de8f
பைனியர் தனித்தொகுதியில் போட்டியிடும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் திருவாட்டி ஸ்டெஃபனி டான் மக்களைச் சந்தித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக நாடாளுமன்றத்தில் இருந்திருப்பதால் பைனியர் தனித்தொகுதியில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அந்தத் தொகுதியின் கட்சி வேட்பாளர் ஸ்டெஃபனி டான் சனிக்கிழமை (ஏப்ரல் 26) கூறியுள்ளார்.

பைனியர் தனித்தொகுதியில் முதன்முறையாகக் களம் காண்கிறார் அவர். திருவாட்டி டான் அடிக்கடி பைனியர் வட்டாரத்துக்கு வந்திருப்பதால் குடியிருப்பாளர்கள் தம்மை அடையாளம் காணமுடிவதாகக் குறிப்பிட்டார்.

தனித்தொகுதியில் உள்ள 131 புளோக்குகளுக்கும் கடந்த சில மாதங்களில் அவர் சென்றிருக்கிறார். தொகுதி உலாவின்போது திருவாட்டி டான் அணுகிய இளையர்கள் அவரிடம் வேலைவாய்ப்பு, வீடமைப்பு போன்ற கொள்கைகள் குறித்து கேள்வி கேட்டதாகச் சொன்னார்.

“முதல் முறை, இரண்டாவது முறை வாக்களிப்போர் மிகவும் நல்ல கேள்விகளை எழுப்பினர்,” என்ற 37 வயது திருவாட்டி டான், நாடாளுமன்றத்தில் கட்சி முன்வைத்த விவகாரங்களின் அடிப்படையில் பதில் சொன்னதாகக் கூறினார்.

20 வயதுகளில் உள்ளோர் வீடமைப்பு விவகாரங்கள் பற்றியும் புதிய பட்டதாரிகள் வேலைவாய்ப்பு பற்றியும் கேள்வி கேட்டதைத் திருவாட்டி டான் பகிர்ந்துகொண்டார். சிறு பிள்ளைகள்கூட தம்மிடம் தொடக்கப்பள்ளி இறுதியாண்டு தேர்வு குறித்து கேட்டதாக அவர் கூறினார்.

மே 3ஆம் தேதி பைனியர் தனித்தொகுதியில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியும் மக்கள் செயல் கட்சியும் நேரடியாக மோதவிருக்கின்றன.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலிருந்து மக்கள் செயல் கட்சியின் திரு பெட்ரிக் டே பைனியர் தனித்தொகுதியைப் பிரதிநிதித்து வருகிறார்.

2020 பொதுத் தேர்தலில் அவர் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியையும் சுயேட்சை வேட்பாளரையும் பின்னுக்குத் தள்ளி 62 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று வென்றார்.

“எங்களுக்கு இருக்கும் வளங்களைக் கொண்டு எங்களால் முடிந்ததைச் செய்வோம்,” என்ற திருவாட்டி டான், “நான் தேர்வுசெய்யப்பட்டால் உறவுகளைத் தொடர்ந்து உருவாக்குவேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்