இந்த ஆண்டின் பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்திற்குக் கூடுதலாக 1,299 வாகன உரிமைச் சான்றிதழ்கள் (COE) வழங்கப்படவிருக்கின்றன. இது முந்தைய மூன்று மாத எண்ணிக்கையைவிட 8.2 விழுக்காடு அதிகம்.
ஏலத்தில் மொத்தம் 17,133 வாகன உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (ஜனவரி 16) அறிவித்தது.
இதன்கீழ், கார்களுக்கும் மோட்டார்சைக்கிள்களுக்குமான பிரிவுகளில் மொத்தம் 4,201 ‘சிஓஇ’ சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
2025ஆம் ஆண்டு பிப்ரவரி தொடங்கி படிப்படியாக, அடுத்த சில ஆண்டுகளுக்குக் கூடுதலாக 20,000 வரையிலான வாகன உரிமைச் சான்றிதழ்களை வழங்கவிருப்பதாகக் கடந்த அக்டோபர் மாதம் ஆணையம் அறிவித்தது.
ஐந்து வாகனப் பிரிவுகளுக்கும் அது பொருந்தும் என்று அது குறிப்பிட்டிருந்தது.
பயணமுறை படிப்படியாக மாற்றம் கண்டு வருவதால் இவ்வாறு செய்வது சாத்தியம் என்று ஆணையம் சொல்லிற்று. வாகனங்கள் கடக்கும் மொத்தத் தொலைவு, 2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையில் ஏறக்குறைய ஆறு விழுக்காடு குறைந்திருப்பதாக அது கூறியது.
அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் அடிப்படையிலான மின்னியல் சாலைக் கட்டண முறை, போக்குவரத்து நெரிசலை மேம்பட்ட வகையில் சமாளிக்க அதிகாரிகளுக்குக் கைகொடுக்கும் என்று கூறப்பட்டது.
கடந்த நவம்பர் முதல் இந்த மாதம் வரையிலான காலகட்டத்திற்கு ‘ஏ’ பிரிவு கார்களுக்கு 10.3 விழுக்காடு கூடுதல் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
‘பி’ பிரிவில் 10 விழுக்காடு கூடுதலாகவும் பொதுப் பிரிவில் 10.7 விழுக்காடு கூடுதலாகவும் ‘சிஓஇ’ சான்றிதழ்கள் வழங்கப்படும்.
வர்த்தக வாகனப் பிரிவில் 10 விழுக்காடு கூடுதல் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மோட்டார்சைக்கிள்களுக்கான ‘சிஓஇ’ எண்ணிக்கையில் மாற்றமிருக்காது.
அடுத்த ‘சிஓஇ’ ஏலம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும்.