இந்தியாவில் முதலீடு செய்ய சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்ய சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அழைப்பு

2 mins read
6ec18c06-8702-4245-8e46-a5cf16e00ef7
இந்தியாவில் வர்த்தகம் செய்ய சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இன்வெஸ்ட் இந்தியா அலுவலகம் ஒன்றை இந்திய அரசாங்கம் சிங்கப்பூரில் கடந்த செப்டம்பர் மாதம் அமைத்தது. புதிய அலுவலகத்தை இந்திய வர்த்தக, தொழில்அமைச்சர் கோயல் (இடது) திறந்துவைத்தார். - படம்: சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகம்

இந்தியா முன்பைவிட பேரளவில் உருமாறி, வளர்ச்சி அடைந்திருப்பதை சிங்கப்பூர் நிறுவனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய வர்த்தக, தொழில் அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

நீண்டகால முதலீடு செய்யக்கூடிய இடமாக இந்தியாவை சிங்கப்பூர் நிறுவனங்கள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அவர்.

கடந்த பத்தாண்டுகளில் தனது உள்கட்டமைப்பையும் ஊழியரணியையும் மேம்படுத்துவதில் இந்தியா தீவிரமாகச் செயல்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“சாலைகள், ரயில் பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், வீடமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு போன்றவற்றில் இந்திய அரசு முன்பு இல்லாத அளவில் முதலீடு செய்வதாக தி பிசினஸ் டைம்ஸ் நாளிதழக்குப் பேட்டியளித்த அமைச்சர் கோயல் கூறினார்.

இந்தியாவில் பொருள்களை உற்பத்தி செய்யும் திட்டத்தை அந்நாட்டுப் பிரதமர் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தினார்.

அதையடுத்து வரி சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதுடன் அதிகாரத்துவச் செயல்முறைகள் எளிதாக்கப்பட்டதை அமைச்சர் கோயல் சுட்டினார்.

இவை இந்தியாவில் வர்த்தகம் செய்வதை எளிதாக்க உதவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“இந்தியாவில் வர்த்தகம் செய்வதை எளிதாக்க கிட்டத்தட்ட 42,000 விதிமுறைகள் நீக்கப்பட்டுவிட்டன. சிறு வர்த்தகங்களுக்குத் தொல்லை கொடுப்பதைத் தவிர்க்க சிறுசிறு குற்றச் செயல்களுக்கான கிட்டத்தட்ட 3,700 தண்டனை விதிப்பு முறைகள் நீக்கப்பட்டன,” என்றார் அமைச்சர் கோயல்.

நீக்கப்பட்ட தண்டனை விதிப்பு முறைகளில் கட்டடங்கள் தொடர்பானவையும் அடங்கும்.

இதன் விளைவாக உலக வங்கியின் வர்த்தகம் செய்ய ஏற்புடைய நாடுகள் பட்டியலில் இந்தியா 2019ஆம் ஆண்டில் 63வது இடத்துக்கு முன்னேறியது.

2014ஆம் ஆண்டில் அது 142வது இடத்தில் இருந்தது.

அதே சமயம், இந்தியாவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரின் நிலை மேம்பட்டுள்ளதாகவும் அவர்கள் தரமான பொருள்கள், சேவைகளை நாடுவதாகவும் அமைச்சர் கோயல் தெரிவித்தார்.

இது சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு பேரளவிலான வாய்ப்புகளை அள்ளித் தருவதாக அவர் கூறினார்.

இந்தியாவில் வர்த்தகம் செய்ய சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ‘இன்வெஸ்ட் இந்தியா’ அலுவலகம் ஒன்றை இந்திய அரசாங்கம் சிங்கப்பூரில் கடந்த செப்டம்பர் மாதம் அமைத்தது.

புதிய அலுவலகத்தை அமைச்சர் கோயல் திறந்துவைத்தார்.

“சிங்கப்பூருடனான பொருளியல் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்திய அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டைப் புதிய அலுவலகம் பிரதிபலிக்கிறது,” என்று அமைச்சர் கோயல் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்