முன்னாள் டிபிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரியான பியூஷ் குப்தாவை, அதிபர் ஆலோசனை மன்ற மாற்று உறுப்பினராக நான்காண்டு காலத்திற்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் நியமித்துள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், பொதுச் சேவை ஆணையத் தலைவர் லீ ஸு யாங் ஆகியோருடன் கலந்து பேசிய பின்னர் பிரதமர் லாரன்ஸ் வோங் வழங்கிய ஆலோசனையின் பேரில் இந்த நியமனம் நடைபெற்று உள்ளதாகவும் அதிபர் அலுவலக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
திரு எடி டியோ தலைமையிலான அதிபர் ஆலோசனை மன்றத்தில் ஏழு உறுப்பினர்களும் கான் சியோவ் கீ என்னும் மாற்று உறுப்பினரும் உள்ள நிலையில் மற்றொரு மாற்று உறுப்பினராக திரு பியூஷ் குப்தா இடம்பெறுகிறார்.
அதிபர் ஆலோசனை மன்ற உறுப்பினர் ஒருவர் தமது பொறுப்புகளில் ஈடுபட இயலாத வேளைகளில் அவரது வழக்கமான பணிகள் மாற்று உறுப்பினருக்கு மாறும்.
திரு குப்தா, 2009 நவம்பர் முதல் 2025 மார்ச் வரை டிபிஎஸ் வங்கிக் குழுமத்தின் இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார். அவரது தலைமைத்துவத்தின்கீழ் டிபிஎஸ் வங்கி வெற்றிகரமான உருமாற்றத்தைக் கண்டது. அதன் காரணமாக, உலகின் சிறந்த வங்கியாகவும் சிறந்த மின்னிலக்க வங்கியாகவும் டிபிஎஸ் பலமுறை பெயர் குறிப்பிடப்பட்டது.
டிபிஎஸ் குழுமத்தில் இணையுமுன்னர் ‘சிட்டிகுரூப்’பில் 27 ஆண்டு காலம் பணியாற்றிய திரு குப்தா, அந்தக் குழுமத்தில் இருந்து விடைபெறும்போது அதன் தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பிரிவுகளுக்கான தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.
தற்போது, சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் அறங்காவல் குழுத் தலைவராகவும் மண்டாய் வனவிலங்கு பூங்கா வாரியத்தின் தலைவராகவும் கெப்பல் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவராகவும் திரு குப்தா உள்ளார்.
வர்த்தக, தொழில் அமைச்சின் வருங்காலப் பொருளியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ள அவர், தேசிய ஆய்வு அறநிறுவனக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார். அவற்றுடன், சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் அறங்காவலராகவும் அவர் உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
திரு குப்தா, டெல்லியின் செயின்ட் ஸ்டீஃபன்’ஸ் கல்லூரியில் பொருளியல் இளங்கலை (ஹானர்ஸ்) பட்டமும் அகமதாபாத் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் மேலாண்மைப் படிப்பில் மேல்நிலைப் பட்டயமும் பெற்றவர்.