தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐந்து பள்ளிகள் இருந்த இடங்கள் குடியிருப்புப் பகுதிகளாக மாறுகின்றன

3 mins read
efd03e84-3149-4d98-a5f9-bedf4de155d2
மே 8ஆம் தேதி காணப்பட்ட முந்தைய தெமாசெக் தொடக்கப்பள்ளி, தெமாசெக் உயர்நிலைப் பள்ளி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஐந்து பள்ளிகள் இருந்த இடங்கள், புதிய குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்காகத் தயாராகி வருகின்றன.

சிங்கப்பூரின் கிழக்கே உள்ள ஐந்து பள்ளிகளும் ஏற்கெனவே வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டன அல்லது மற்றொரு பள்ளியுடன் இணைக்கப்பட்டுவிட்டன.

நகர மறுசீரமைப்பு ஆணையம் ஏப்ரல் 24, மே 7ஆம் தேதி வெளியிட்ட பெருந்திட்டத்தில் ஐந்து பள்ளிகள் இருந்த இடங்களில் புதிய வீடுகள் கட்டப்படுவது குறித்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிடோக் டவுன் உயர்நிலைப் பள்ளி, தெமாசெக் தொடக்கப் பள்ளி, தெமாசெக் உயர்நிலைப் பள்ளி, தெம்பனிசில் உள்ள சியோனான் தொடக்கப் பள்ளி, பாசிர் ரிஸ்சில் சிக்லாப் உயர்நிலைப் பள்ளி ஆகியன ஐந்து பள்ளிகளாகும்.

மூன்று பள்ளிகளை இடிக்கும் பணியை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) தொடங்கியிருக்கிறது. எஞ்சிய இரண்டு பள்ளிகளையும் இடிக்க நகர மறுசீரமைப்பு ஆணையத்திடம் அது அனுமதி கேட்டுள்ளது.

2019ல் ஆணையத்தின் பெருந்திட்டத்தில் முன்மொழியப்பட்ட பிற திருத்தங்களில் சின் மிங், தோ பாயோ போன்ற பகுதிகளில் புதிய வீடுகள் கட்டவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட திருத்தங்களில், பிடோக் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகிலுள்ள ஒர் இடத்தை கல்விப் பயன்பாட்டிலிருந்து குடியிருப்புப் பயன்பாட்டிற்கு மாற்றுவதும் ஒன்றாகும்.

அந்த இடம், நியூ அப்பர் சாங்கி ரோடு, பிடோக் சவுத் ரோடு சந்திப்பில் அமைந்துள்ளது. முன்பு அங்கு தெமாசெக் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகள் இருந்தன.இரு பள்ளிகளும் பிடோக் சவுத் மற்றும் அப்பர் ஈஸ்ட் கோஸ்ட்டில் உள்ள இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

அவற்றின் மொத்த பரப்பளவு 31,500 சதுர மீட்டர்.

சொத்துச் சந்தை வல்லுநர்கள், அந்த இடங்களில் ஆயிரம் முதல் 1,100 தனியார் அடுக்குமாடி வீடுகள் அல்லது 700 முதல் 820 வரையிலான பொதுக் குடியிருப்பு வீடுகள் கட்ட முடியும் என்று சொல்கின்றனர்.

ஆனால் பிடோக் சவுத் ரோடு தொழிற்பேட்டைகளுக்கு அருகே இந்த இடங்கள் அமைந்துள்ளதால் தனியார் அடுக்குமாடி மேம்பாட்டாளர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்று மோகல்.எஸ்ஜி இணையத்தளத்தின் சொத்துச் சந்தை ஆய்வு அதிகாரியான நிக்கலஸ் மாக் தெரிவித்தார்.

எண் தெம்பனிஸ் ஸ்திரீட் 11ல் இருந்த சியோனான் தொடக்கப்பள்ளியை இடிக்கும் பணியை அண்மையில் வீவக முடித்துள்ளது. இதையடுத்து கால்வாய் அமைப்பது உள்ளிட்ட பணிகள் அங்கு நடைபெற்று வருகின்றன.

1985ல் கியாவ் நாம் பள்ளி, புலாவ் தெக்கோங் தொடக்கப் பள்ளி இணைக்கப்பட்டு சியோனான் பள்ளி உருவானது. அதே ஆண்டில் அது தெம்பனிசிலிருந்து செயல்படத் தொடங்கியயது.

2015ல் அந்தப் பள்ளி, கிரிஃபித்ஸ் தொடக்கப் பள்ளியுடன் இணைக்கப்பட்டு அங்சானா தொடக்கப்பள்ளி உருவானது. இது, தெம்பனிஸ் ஸ்திரீட் 22ல் உள்ள கிரிஃபித்ஸ் இடத்தில் செயல்பட்டு வருகிறது.

முன்னைய சியோனான் பள்ளி இருந்த இடம் 14,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்தது.

இங்கு, அதிகபட்சமாக 250 வீடுகள் வரை கட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு அடுத்ததாக 10 பாசிர் ரிஸ் டிரைவில் உள்ள முன்னைய சிக்லாப் பள்ளியை வீவக இடித்து வருகிறது.

2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இடிக்கும் பணி முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னைய சிக்லாப் உயர்நிலைப் பள்ளியின் இடம், சுமார் 30,500 சதுர மீட்டர் பரப்பளவாகும்.

ஏறக்குறைய 700 முதல் 900 பொதுக் குடியிருப்பு வீடுகள் அல்லது 1,200 வரையிலான தனியார் அடுக்கு மாடி வீடுகள் கட்டலாம் என சொத்து பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

தோ பாயோவில் உள்ள ஒரு சிறிய இடத்தில் குடியிருப்பு வீடுகள் கட்டவும் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

தோ பாயோ லோரோங் 4 மற்றும் பல வீவக புளோக்குகள் சுற்றியுள்ள திறந்தவெளி கார் பேட்டை உள்ள இடத்தில் வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மொத்த பரப்பளவு 7,500 சதுர மீட்டர்.

குறிப்புச் சொற்கள்