சிங்கப்பூரில் ஆளில்லா வானூர்திகளை (ட்ரோன்) பறக்கவிட மேலும் சில இடங்கள் ஒதுக்க அரசாங்கத் திட்டமிட்டுவருகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட புதிய இடங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சிங்கப்பூரில் ட்ரோன்களைப் பறக்கவிடுவதற்காகவே இரண்டு இடங்கள் உள்ளன.
ட்ரோன்களை நீருக்கு மேல் பறக்கவிட பாண்டன் நீர்த்தேக்கம் உள்ளது. தரைக்கு மேல் ட்ரோன்களைப் பறக்கவிட டோவர் ரோட்டில் உள்ள திறந்தவெளி இடம் உள்ளது. “புதிய இடங்கள் குறித்து நாங்கள் சில அரசாங்க அமைப்புகளுடன் பேசிவருகிறோம். தற்போது உள்ள இரண்டு இடங்களும் நாட்டின் மேற்குப் பகுதியில் இருக்கின்றன,” என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது. “இரண்டு இடங்களிலும் ட்ரோன்களைப் பயன்படுத்தியவர்கள் நல்ல கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அதனால் மற்ற இடங்களிலும் சிறப்பான வசதிகள் அமைத்துக்கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம்,” என்று ஆணையம் கூறியது. புதிதாக வரும் இடங்கள் குடியிருப்பு வட்டாரங்களுக்கு அருகில் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ட்ரோனுக்கான இடம் முடிவு செய்வதற்கு முன்னர் அங்குள்ள குடியிருப்பாளர்களுடனும் பேசப்படும் என்றும் அவர்கள் கூறினர். “ட்ரோன் வைத்திருப்பவர்கள் பாண்டன் நீர்த்தேக்கம், டோவர் ரோட்டில் திறந்தவெளி இடம் ஆகியவற்றைத் தினமும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வார இறுதிகளில் அதிகமானவர்கள் வருகின்றனர்,” என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கூறுகிறது. அதேபோல் சிங்கப்பூரில் ட்ரோன்களைப் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24,176 பேர் தங்களது ட்ரோன்களைப் பதிவு செய்திருந்தனர். இவ்வாண்டு மார்ச் மாதம் அந்த எண்ணிக்கை 26,540 ஆக உயர்ந்ததுள்ளது. 250 கிலோ கிராமுக்கு மேல் எடையுள்ள ஆளில்லா வானூர்திகள் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் பதிவு செய்திருக்க வேண்டும்.