பாட்டாளிக் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வியாழக்கிழமை (ஏப்ரல் 17) வெளியிட்டது.
தேர்தல் அறிக்கை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 125 கொள்கைப் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
‘சிங்கப்பூருக்கு உழைக்கிறோம்’ எனும் தலைப்பைக் கொண்ட அறிக்கையில் கட்டுப்படியான விலை, வாழ்க்கைச் செலவினம் குறித்த கவலை, பொருளியல் வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள், அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம், சமத்துவம், வெளிப்படைத்தன்மை, ஜனநாயகம், பாதுகாப்பு, புவிசார் அரசியல் ஆகியவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
கேலாங் வட்டாரத்தில் உள்ள பாட்டாளிக் கட்சியின் தலைமையகத்தில் அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாம் செய்தியாளர்களிடம் பேசினார்.
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது வெளியிடப்பட்ட பாட்டாளிக் கட்சியின் தேர்தல் அறிக்கையைவிட இவ்வாண்டின் தேர்தல் அறிக்கை மேம்படுத்தப்பட்டது, சீராக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் கூடுதல் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்ததாகவும் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பரிந்துரைகளைப் பற்றி விவாதிக்க முடிந்ததாகவும் திரு கியாம் கூறினார்.
2020ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற சில பரிந்துரைகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாததால் இவ்வாண்டின் தேர்தல் அறிக்கையிலும் அவை இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“அந்தப் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்பதற்காக அவற்றைப் பாட்டாளிக் கட்சி கைவிடவில்லை. வாய்ப்பு கிடைத்தால் அவை குறித்து நாடாளுமன்றத்தில் மீண்டும் வாதிடத் திட்டமிட்டுள்ளோம்.
“கூடுதல் நியாயமான, பாதுகாப்பான சிங்கப்பூரை உருவாக்க இதுவே எங்கள் கட்சியின் திட்டம். இது அனைவருக்கும் உகந்த திட்டமாகும்,” என்று திரு கியாம் கூறினார்.

