பிசிஎஃப் பாலர் பள்ளி ஆசிரியர்களின் நிர்வாகச் சுமையைக் குறைக்கத் திட்டம்

பிசிஎஃப் பாலர் பள்ளி ஆசிரியர்களின் நிர்வாகச் சுமையைக் குறைக்கத் திட்டம்

1 of 2
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Oct 2026 - 5:43 pm

2 mins read

சிங்கப்பூரின் ஆகப்பெரிய பாலர் பள்ளி நிறுவனமான பிசிஎஃப், தனது ‘ஸ்பார்க்கல்டோட்ஸ்’ பாலர் பள்ளி மையங்களில் மேற்கொள்ளப்பட இருக்கும் புதிய நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தனது பணியாளர் மேம்பாட்டிற்குச் செலவழிக்கப்பட்டு வரும் தொகையை அடுத்த மூன்றாண்டுகளில் $20 மில்லியன் என இரட்டிப்பாக்க இருப்பதாக அது அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

தேவைப்படும் பாலர் பள்ளிகள் அனைத்திலும் சீனம், மலாய், தமிழ் மொழிகளில் கற்பிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அது கூறியது.

அடுத்ததாக, மாணவர்கள் மீதும் கற்பித்தலிலும் அதிகக் கவனம் செலுத்துவதற்கு வசதியாக ‘ஸ்பார்க்கல்டோட்ஸ்’ பாலர் பள்ளி ஆசிரியர்களின் நிர்வாகப் பணிகளைக் குறைக்க புதிய முறையை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

மசெக சமூக அறநிறுவனமான பிசிஎஃப், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) தனது 40வது ஆண்டுநிறைவைக் கொண்டாடியது. அதனையொட்டி மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடும்பநாள் நிகழ்ச்சியில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற துணைப் பிரதமர் கான் கிம் யோங், கடந்த 40 ஆண்டுகளில் பிசிஎஃப் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு ஆதரவளித்துள்ளது என்றார்.

அத்துடன், ஏறத்தாழ 30,000 மூத்தோருக்குச் சேவையாற்றியுள்ளது என்றும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் 46,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்குக் கைகொடுத்து உதவியது என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது கிட்டத்தட்ட 350 பாலர் பள்ளி மையங்களை நடத்தி வரும் பிசிஎஃப் நிறுவனம், 11 மூத்தோர் பராமரிப்பு மையங்களையும் நடத்துகிறது. துடிப்புடன் மூப்படைதலுக்கான ஒன்பது மையங்களையும் அது நிர்வகிக்கிறது.

சிங்கப்பூரின் மூன்றாவது ஆகப்பெரிய முதியோர் பராமரிப்புச் சேவை நிறுவனமாக பிசிஎஃப் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

பிசிஎஃப் நிர்வாகக்குழுவின் தலைவரும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சருமான ஜோசஃபின் டியோவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

கைதேர்ந்த ஆசிரியர்கள், குழந்தைகளின் கற்றலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதால், பணியாளர் மேம்பாட்டிற்கான முதலீட்டை பிசிஎஃப் இரட்டிப்பாக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

“பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் தொடக்கப் பருவத்தில் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளிகள்மீது நம்பிக்கை வைக்கின்றனர்.

“எனவே, அனைத்துப் பின்னணிகளையும் சேர்ந்த குழந்தைகளுக்கு பாலர் பள்ளியில் வலுவான தொடக்கத்தை அளித்து, அவர்கள் தன்னம்பிக்கையுடன் வளர உதவுவதில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

“இதைச் சிறப்பாகச் செயல்படுத்த, நாம் நமது ஆசிரியர்களை மேம்படுத்தி, அவர்கள் இன்னும் திறம்படச் செயல்பட உதவ வேண்டும்.

“நிபுணத்துவத் திறன்கள், தலைமைத்துவம், மின்னிலக்கக் கல்வித்திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று வழிகாட்டித் திட்டங்களின் அடிப்படையில், ஆசிரியர்கள் உட்பட கிட்டத்தட்ட 8,500 பேருக்குப் பயிற்சி, மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு பிசிஎஃப் ‘ஸ்பார்க்கல்டோட்ஸ்6 முதலீட்டு ஆதரவை வழங்கும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்