அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடுத்துள்ள போர், விடுமுறைத் திட்டங்களை வகுப்பதில் பயணிகளை மேலும் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது.
நிலையற்ற போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் ஈரானியத் துறைமுகங்கள்மீது அறிவிக்கப்பட்டுள்ள முற்றுகை என, இந்த மோதல் ஏழாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், விமானப் போக்குவரத்து, எரிசக்தி மற்றும் கப்பல் போக்குவரத்து போன்ற தொழில்கள் மீதான அதன் தாக்கம் தொடர்ந்து பரவி வருகிறது.
போருக்கு முந்தைய நிலைகளை ஒப்பிட, எண்ணெய் விலை 30 முதல் 40 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதால், சில விமான நிறுவனங்கள் கூடுதல் எரிபொருள் கூடுதல் கட்டணங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
வியட்னாம் ஏர்லைன்ஸ் மற்றும் பாத்திக் ஏர் மலேசியா உள்ளிட்ட சில ஆசிய விமான நிறுவனங்கள், உயர்ந்து வரும் எரிபொருள் விலைகளின் தாக்கத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள, விமானச் சேவைகளைக் குறைக்கத் தொடங்கியுள்ளன.
சிங்கப்பூரைச் சேர்ந்த 30 வயதான ஷஃபிகா அமிராவும் அவரது கணவரும் தங்களது பயணத் திட்டங்களைக் குறைக்க எண்ணியுள்ளனர். அவர் வழக்கமாக ஆண்டுக்குச் சுமார் மூன்று முறை, பெரும்பாலும் ஆசியாவிற்குள் உள்ள இடங்களுக்குப் பயணம் மேற்கொள்வார்.
“இந்த ஆண்டு பயணத்தை முடிந்தவரை குறைத்துக்கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். மேலும், வேலை அல்லது சிறப்பு நிகழ்வுகளுக்கான அத்தியாவசியப் பயணங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்,” என்கிறார் அந்தத் தன்னுரிமை மின்வணிக நேரலைத் தொகுப்பாளர்.
சமூக ஊடக மேலாளரான 30 வயதான லிம் ஜியாயியும் இதேபோன்ற எச்சரிக்கையான அணுகுமுறையைக் கையாளுகிறார்.
“போர் முடியும் வரை நான் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்கக்கூடும். இப்போதைக்கு, சிங்கப்பூருக்கு அருகிலுள்ள கிழக்காசிய நாடுகள் போன்ற இடங்களுக்குப் பயணங்களைத் திட்டமிடுகிறேன். ஏனெனில், தொலைதூர இடங்களுக்கான விமானப் பாதைகள் பாதிக்கப்படலாம் என்று நான் கவலைப்படுகிறேன்,” என்கிறார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்
மோதல் தீவிரமடையும்போது, பாதுகாப்பு ஆலோசனைகள், வான்வெளி மூடல்கள் மற்றும் விமானப் பயண இடையூறுகள் உள்ளிட்ட நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துகொள்வது, பாதுகாப்பான பயண வழிகளைத் திட்டமிடுவதற்கு மிக முக்கியம்.
தகவல்களைத் தானியக்கப்படுத்துவதற்கான ஓர் எளிய வழி ‘கூகல் அலர்ட்ஸ்’ ஆகும். ‘ஈரான்’, ‘அமெரிக்கா’, ‘டிரம்ப்’ போன்ற முக்கிய வார்த்தைகளையும், செல்ல வேண்டிய நகரம் மற்றும் நாட்டையும் உள்ளிடுவதன் மூலம், இணையத்தில் புதிய தகவல்கள் தோன்றும்போதெல்லாம் பயணிகள் மின்னஞ்சல் அறிவிப்புகளைப் பெறலாம்.
பயணக் காப்பீடு
எட்டிகா இன்சூரன்ஸ் சிங்கப்பூர், பயணக் காப்பீடு தொடர்பான விசாரிப்புகளில் ஆண்டுக்கு ஆண்டு சுமார் 20 விழுக்காட்டு அதிகரிப்பையும், உயர் அடுக்குத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் சுமார் 10 விழுக்காட்டு உயர்வையும் பதிவு செய்துள்ளது.
“குறைந்த சந்தாவைத் தேர்ந்தெடுப்பதைவிட, அதிக மருத்துவ வரம்புகள் மற்றும் ரத்துசெய்தல், இடையூறுகளுக்கான அதிக நீக்குப்போக்கு உள்ளிட்ட விரிவான பாதுகாப்பிற்கான விருப்பம் அதிகரித்து வருவதையே இது குறிக்கிறது,” என்கிறார் எட்டிகா இன்சூரன்ஸ் சிங்கப்பூரின் நேரடி வணிகப் பிரிவுத் தலைவர் ஜாஸ்ரியல் வோங்.
தொடர்பில் இருங்கள்
திருவாட்டி லிம் பொதுவாகத் தனது பயணத் திட்டங்களை வெளியுறவு அமைச்சிடம் பதிவு செய்கிறார். இது, அவர் வெளிநாட்டில் இருக்கும்போது அண்மைய தகவல்களைப் பெறவும், அவசர காலங்களில் தொடர்பில் இருக்கவும் உதவுகிறது. மேலும், நடப்பு நிகழ்வுகள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, தனக்கு வலுவான இணைய வசதி இருப்பதையும் அவர் உறுதிசெய்கிறார்.

