சிங்கப்பூரின் 60ஆம் நிறைவாண்டைக் கொண்டாடும் விதமாக ரஹ்மத்தன் லில் ஆலமின் அறநிறுவனம், ‘எல்லோர்க்குமான பெருவாழ்வு 2025’ என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
இத்திட்டம், 5,000 குடும்பங்களுக்கு $60 மதிப்பிலான பேரங்காடிப் பற்றுச்சீட்டுகளை வழங்கவுள்ளது.
சிங்கப்பூர் இதனைக் கொண்டாடும் நேரத்தில், ஆதரவு தேவைப்படும் குடும்பங்களை ஒன்றிணைத்து இந்நாட்டின் அருளுடைமை, பிறரை ஒருங்கிணைக்கும் தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்த முற்படுவதாக அறநிறுவனம் வெள்ளிக்கிழமை (மே 9) வெளியிட்ட செய்தியாளர் அறிக்கையில் குறிப்பிட்டது.
2021 முதல் சமூகத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்த ரஹ்மத்தன் அறநிறுவனம், இவ்வாண்டு தனது 300,000 வெள்ளி நிதித்திரட்டு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்), ஒன் மாஸ்க் துறை, பிஏ மெஸ்ரா, ஹார்மனி சர்க்கல்ஸ், கேர் கார்னர் உள்ளிட்ட முக்கியப் பங்காளிகள் திட்டத்தில் இணைகின்றன.
பல்வேறு அமைப்புகள் இவ்வாறு இணைவதன்வழி, தங்கள் திட்டங்கள் பலதரப்பட்ட சமூகங்களைச் சேர்வதாகவும் அதே நேரத்தில் நல்லிணக்கம் மேம்படுவதாகவும் ரஹ்மத்தன் லில் ஆலமின் அறநிறுவனம் கூறியது.
நன்கொடை தந்து ஆதரிக்க விரும்புவோர், கிவிங்.எஸ்ஜி தளத்திலுள்ள https://tinyurl.com/BTARLAF2025 என்ற இணையத்தளத்தை நாடலாம்.

