சிங்கப்பூரில் உளவியல் நிபுணர்களுக்கு விரைவில் கட்டாயப் பதிவு முறை அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இதுவரை குறைந்தது 870 உளவியல் நிபுணர்கள் சிங்கப்பூர் உளவியல் சங்கத்தில் தாமாகவே முன்வந்து பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் இங்கு பணியாற்றும் உளவியல் நிபுணர்களின் மொத்த எண்ணிக்கை குறித்த ஆரம்பகட்டத் தகவல் கிடைத்துள்ளது.
2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏறத்தாழ 700ஆக இருந்த இந்தப் பதிவுகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. புதிய விண்ணப்பங்கள் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருவதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று சங்கத்தின் தலைவர் ஏட்ரியன் டோ தெரிவித்தார்.
சிங்கப்பூரில் மனநலச் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், உளவியல் நிபுணர்கள் போன்ற மனநல நிபுணர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இருப்பினும், கட்டாயப் பதிவு முறை இல்லாததால், தகுதியுள்ள உளவியல் நிபுணர்களின் துல்லியமான எண்ணிக்கையைக் கண்டறிவதில் சிரமம் நிலவுகிறது.
மனநலக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான தேசிய அளவிலான முயற்சியின் ஒரு பகுதியாக, அரசுத் துறை உளவியல் நிபுணர்களின் எண்ணிக்கையை 2030ஆம் ஆண்டுக்குள் அல்லது அதற்கு முன்பாக 40 விழுக்காடு அதிகரிக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அத்துடன், பாதுகாப்பு மற்றும் தரத்தை மேம்படுத்த அவர்களுக்கான ஒரு பதிவு கட்டமைப்பையும் வழங்கவுள்ளது.
மார்ச் மாதம் 5 ஆம் தேதியன்று நடைபெற்ற சுகாதார அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது, சுகாதார மூத்த துணையமைச்சர் கோ போ கூன் பேசுகையில், ஐந்து பிரிவுகளில் உளவியல் நிபுணர்களை அமைச்சு பதிவு செய்யும் என்று கூறினார்.
மருத்துவ உளவியல், கல்விசார் உளவியல், ஆலோசனை உளவியல், தடயவியல் உளவியல், மருத்துவ நரம்பு உளவியல் ஆகியவை அவற்றில் அடங்கும்.
இதற்கான விரிவான கால அட்டவணை, நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என்று மூத்த துணையமைச்சர் கோ மேலும் தெரிவித்தார்.
பல்வேறு துறைகளில் அதிக ஆபத்து நிறைந்த மதிப்பீடுகள் மற்றும் தலையீடுகளைக் கையாளுவதால், இந்த ஐந்து பிரிவுகளும் ஒழுங்குமுறை மேற்பார்வைக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அனைத்துலகத் தரநிலைகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஒழுங்குமுறை கட்டமைப்புகள், சிங்கப்பூர் உளவியல் சங்கத்தின் தற்போதைய அளவுகோல்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த பதிவுத் தேவைகள் உருவாக்கப்பட்டு வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

