‘ஏஐ’யால் மாறிவரும் உலகிற்குச் சிங்கப்பூரர்களைத் தயார்ப்படுத்த நடவடிக்கை

‘ஏஐ’யால் மாறிவரும் உலகிற்குச் சிங்கப்பூரர்களைத் தயார்ப்படுத்த நடவடிக்கை

2 mins read
ae8aeb2c-9fef-4eb7-b6d1-8a5bfd03d2bd
செயற்கை நுண்ணறிவால் உருமாறிய உலகில் கல்வி முறையைத் தயார்ப்படுத்த கல்வி அமைச்சு முயற்சி மேற்கொண்டு வருகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் பரவலாகக் கிடைக்கும் இந்தக் காலகட்டத்தில் மதிப்பீட்டு அணுகுமுறைகள் தகுதியானவையாகத் தொடர்வதைக் கல்வி அமைச்சு உறுதிப்படுத்தும் என்று கல்விக்கான துணை அமைச்சர் ஜாஸ்மின் லாவ் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கல்வி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய திருவாட்டி ஜாஸ்மின், செயற்கை நுண்ணறிவால் உருமாறிய உலகிற்குச் சிங்கப்பூரர்களைத் தயார்ப்படுத்துவதற்காகக் கல்விமுறையை அமைச்சு மாற்றியமைக்கும் வழிகள் குறித்து விளக்கினார்.

தரவுப் பாதுகாப்பு, பாதுகாப்பு, நியாயத்தன்மை ஆகியவற்றின் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்ய கல்வி அமைச்சு உருவாக்கிய செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் உரிய ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

தேசிய செயற்கை நுண்ணறிவு ஆளுமைக் கொள்கைகளுக்கு ஏற்ப பொறுப்பான முறையில் இதனைச் செயல்படுத்துவதை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் கல்வி அமைச்சு அணுக்கமாகப் பணியாற்றும்.

கல்வியாளர்கள் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை அர்த்தமுள்ள, சிந்தனைமிக்க வகையில் பயன்படுத்துவதை உறுதிசெய்ய கல்வி அமைச்சும் தேசிய கல்விக் கழகமும் இணைந்து தொழில்முறைக் கற்றல் வாய்ப்புகளை வலுப்படுத்தவுள்ளன.

அனைவரும் எளிதில் அணுகக்கூடிய, நடைமுறைக்கேற்ற செயற்கை நுண்ணறிவுத் திறன் மேம்பாட்டு வழிகளை விரிவுபடுத்த, கல்வி அமைச்சு தனது பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதாகக் குறிப்பிட்ட திருவாட்டி ஜாஸ்மின், அது தொடர்பான மூன்று வழிகளையும் விளக்கினார்.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு, சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, தானாக எளிதாக அறிந்துகொள்ளும் கருவியை (self-diagnostic) உருவாக்கியுள்ளது.

ஒரு சில குறுகிய கேள்விகளின் மூலம் தனிமனிதர்கள் தங்களின் தயார்நிலை அளவைப் பிரதிபலிக்கும் வகையில் பிரிக்கப்படுவர்.

பின்னர் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு ஆதரவு பெற்ற உயர்தரப் பாடப்பிரிவுகளுக்கு அவர்கள் வழிநடத்தப்படுவார்கள்.

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டிற்குள் இந்தக் கருவி மேம்படுத்தப்பட்ட மைஸ்கில்ஸ்ஃபியூச்சர் இணையவாயிலில் வழங்கப்படும்.

தனிமனிதர்கள் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஏராளமான பயிற்சித் தெரிவுகளை எளிதாகக் கண்டறிந்து தேர்ந்தெடுக்கும் வழிகளும் அறிமுகப்படுத்தப்படும்.

அடுத்ததாக, 2026 பிற்பாதியிலிருந்து அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடப்பிரிவுகள், அவற்றின் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் ஓராண்டு காலத்திற்குப் பெருஞ்சலுகை விலையில் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்