பிடோக் விளையாட்டரங்கத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு

2 mins read
40f79332-3c9f-4ccf-a15f-5a50faa70375
‘ஸ்போர்ட்எஸ்ஜி’ அமைப்பின் கீழ் சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் செயல்படும் ஒரே விளையாட்டரங்கம் பிடோக் விளையாட்டரங்கம் மட்டுமே. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிடோக் விளையாட்டரங்கத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் அதிகாரிகள்.

‘ஸ்போர்ட்எஸ்ஜி’ அமைப்பின் கீழ் சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் செயல்படும் ஒரே விளையாட்டரங்கம் பிடோக் விளையாட்டரங்கம் மட்டுமே.

தற்போது நகர மறுசீரமைப்பு ஆணையம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொழுதுபோக்கு பெருந்திட்டம் குறித்த கண்காட்சியை நடத்தி வருகிறது.

பிடோக் விளையாட்டரங்கத்தை மேம்படுத்துவதற்கும் அதற்கு புதுப்பொலிவு கொடுக்கவும் திட்டங்களை ஆராய்ந்து வருகிறோம், கிழக்கு பகுதியில் உள்ள மக்கள் துடிப்புடன் இருக்கவும் அவர்களுக்குத் தேவையான விளையாட்டு வசதிகளை அமைத்து தரவும் அது உதவும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்தது.

பிடோக் டவுன் ஸ்குவேரில் மே 11 முதல் மே 19 வரை பெருந்திட்டம் குறித்த கண்காட்சி இடம்பெற்றது. அது விளையாட்டரங்கம் குறித்த தகவல்களும் இடம்பெற்றிருந்தன.

ஆய்வு நடவடிக்கைகள் எப்போது முடியும், மேம்படுத்தப்பட்ட விளையாட்டரங்கத்தில் என்னென்ன புதிய வசதிகள் இடம் பிடிக்கும் என்று ஸ்போர்ட்எஸ்ஜி மற்றும் நகர மறுசீரமைப்பு ஆணையத்திடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்விகேட்டது.

பொழுதுபோக்கு திட்டங்கள் குறித்து சிங்கப்பூரர்களிடம் கருத்து கேட்டு வருகிறோம். கருத்துகள் திரட்டியப் பிறகே திட்டம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியிடப்படும் என்று அமைப்புகள் பதிலளித்தன.

1980களில் பிடோக் விளையாட்டு வளாகம் கட்டங்கட்டமாக திறக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பிடோக் விளையாட்டரங்கம் இருந்தது.

2018ஆம் ஆண்டு புதிய விளையாட்டு வசதிகளுடன் ஹார்ட்பீட்@பிடோக் திறக்கப்பட்டது.

ஹார்ட்பீட்@பிடோக்கில் உடற்பயிற்சி கூடம், நீச்சல் வளாகம், டென்னிஸ் திடல், பேட்மிண்டன் அரங்கம் என பல்வேறு வசதிகள் உள்ளன. இது ‘ஸ்போர்ட்எஸ்ஜி’ அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது.

பிடோக் வட்டாரத்தில் விளையாட்டு வசதிகள் மேம்பட்டால் அது ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரும் என்று அவ்வட்டாரத்தில் வாழும் குடியிருப்பாளர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்