கிழக்கில் புதிய தனியார் மருத்துவமனைக்கு நிலம் ஒதுக்க திட்டம்: ஓங் யி காங்

லாபநோக்கமற்ற குறைந்த கட்டண மருத்துவமனை

கிழக்கில் புதிய தனியார் மருத்துவமனைக்கு நிலம் ஒதுக்க திட்டம்: ஓங் யி காங்

2 mins read
8ff2fb41-0f68-4244-b1af-eec0e9a78dd9
மவுண்ட் அல்வெர்னியா மருத்துவமனையின் 65வது ஆண்டு நிறைவு விழாவில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் குறைந்த கட்டணத்தில் தனியார் மருத்துவச் சேவையை வழங்கும் நோக்கில் புதிய தனியார் மருத்துவமனைக்கு நிலம் ஒதுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் வியாழக்கிழமை (ஏப்ரல் 9) அறிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனியார் மருத்துவமனைக்காக நிலம் ஒதுக்கப்படுவது இது முதல் முறை.

அங்கு அமையவுள்ள லாபநோக்கமற்ற, தீவிர சிகிச்சை வழங்கும் மருத்துவமனை ஏறக்குறைய 300 முதல் 400 படுக்கை வசதிகளைக் கொண்டிருக்கும்.

சிங்கப்பூரில் தற்போது லாபநோக்கமற்ற, தீவிர சிகிச்சை வழங்கும் ஒரே மருத்துவமனையான மவுண்ட் அல்வெர்னியா மருத்துவமனையின் 65வது ஆண்டு நிறைவு விழாவில் அமைச்சர் ஓங் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் ஓங் யீ காங், மவுண்ட் அல்வெர்னியா மருத்துவமனையின்  புதிய பகல் நேர அறுவை சிகிச்சை நிலையம், மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட புதிய, மேம்படுத்தப்பட்ட வசதிகளை வியாழக்கிழமை (ஏப்ரல் 9) அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.
சுகாதார அமைச்சர் ஓங் யீ காங், மவுண்ட் அல்வெர்னியா மருத்துவமனையின் புதிய பகல் நேர அறுவை சிகிச்சை நிலையம், மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட புதிய, மேம்படுத்தப்பட்ட வசதிகளை வியாழக்கிழமை (ஏப்ரல் 9) அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிபந்தனைகளுடன் கூடிய நில விற்பனை

மருத்துவமனை நிலத்துக்கான ஒப்பந்தப்புள்ளி விவரங்கள் 2026ன் இரண்டாம் பாதியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதாரச் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில், ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களில் சில குறிப்பிட்ட நிபந்தனைகளைச் சேர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஓங் தெரிவித்தார்.

முதலாவது, மருத்துவமனைக் கட்டணத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும்.

இரண்டாவது, நிலத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டதாக இருக்கும். சிகிச்சைத் திட்டம், கட்டுப்படியாகும் செலவு, ஊழியர் சேர்ப்பு மற்றும் மனிதவள மேம்பாடு, மலிவுக் கட்டணத்துக்கான உறுதிப்பாடு முதலியவற்றின் அடிப்படையிலேயே ஏலக்குத்தகை தெரிவுசெய்யப்படும் என்று அவர் விளக்கினார்.

கொடையாளர்கள், பங்குதாரர்களின் ஆதரவுடன் புதிய மருத்துவமனைத் திட்டம், சிங்கப்பூரின் மருத்துவக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கொடையாளர்கள், பங்குதாரர்களின் ஆதரவுடன் புதிய மருத்துவமனைத் திட்டம், சிங்கப்பூரின் மருத்துவக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். - படம்: சாவ் பாவ்

குறைந்த கட்டணத்தில் தனியார் மருத்துவம்

கடைசியாக 2008ல் மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனைக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. $2 பில்லியன் செலவில் கட்டப்பட்ட அந்த மருத்துவமனையில் நிலத்துக்கான தொகை கிட்டத்தட்ட $1.25 பில்லியன்.

மேலும், பொதுச் சுகாதாரச் சேவைத் துறை பல சிறந்த சுகாதாரச் சேவை வல்லுநர்களை அந்தத் தனியார் மருத்துவமனையிடம் இழந்தது.

அந்த அனுபவத்திற்குப் பிறகு அரசாங்கம், இப்போது மிகவும் எச்சரிக்கையுடன் இந்த புதிய லாபநோக்கற்ற மாதிரியை முன்னெடுத்துள்ளது.

இதன் மூலம் காப்புறுதி, மருத்துவச் செலவுகள் உயர்வதைத் தடுத்து, எளிய மக்களும் தரமான தனியார் சிகிச்சையைப் பெற வழிவகை செய்யப்படும் என்று அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.

அதிகரிக்கும் தனியார் மருத்துவக் கட்டணங்களால் மக்கள் பொது மருத்துவமனைகளை நாடுகின்றனர். இதனால் அங்கு 90 விழுக்காட்டுப் படுக்கைகள் நிரம்பியுள்ளன. ஆனால், தனியார் மருத்துவமனைகளோ பாதி அளவு மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.

மவுண்ட் அல்வெர்னியா போன்ற மலிவுக் கட்டண, லாபநோக்கற்ற மாதிரிகள் பொதுத் துறை மீதான நெருக்குதலைக் குறைக்க அவசியம் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.

கொடையாளர்கள், பங்குதாரர்களின் ஆதரவுடன் புதிய மருத்துவமனைத் திட்டம், சிங்கப்பூரின் மருத்துவக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சிங்கப்பூரில் தற்போது லாபநோக்கமற்ற, தீவிரச் சிகிச்சை வழங்கும் ஒரே மருத்துவமனையாக தற்போது மவுண்ட் அல்வெர்னியா உள்ளது.
சிங்கப்பூரில் தற்போது லாபநோக்கமற்ற, தீவிரச் சிகிச்சை வழங்கும் ஒரே மருத்துவமனையாக தற்போது மவுண்ட் அல்வெர்னியா உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்