ஹஜ் யாத்திரைக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளைக் கையாள திட்டங்கள்

ஹஜ் யாத்திரைக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளைக் கையாள திட்டங்கள்

2 mins read
4577c6e5-7e6b-4cd9-a268-abf294adacdf
ஹஜ்ஜுப் பயணத்திற்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. மேலும், அந்த வட்டாரத்தின் அண்மைய நிலவரத்தை முயிஸ் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

மத்திய கிழக்குப் பூசலுக்கு இடையில் இவ்வாண்டுக்கான ஹஜ் யாத்திரையைப் பாதிக்கக்கூடிய சம்பவங்களையும் மற்ற வகை இடையூறுகளையும் கையாள அவசரத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஹஜ்ஜுப் பயணங்களுக்கான தயாரிப்புப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகக் கூறிய அவர், சவூதி அரேபியாவின் ஹஜ்ஜு, உம்ரா அமைச்சுடன் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) இணைந்து அணுக்கமாகச் செயல்படுவதாகத் தெரிவித்தார்.

வட்டாரத்தின் ஆக அண்மைய மாற்றங்களை முயிஸ் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் கூறினார். 

புதன்கிழமை (ஏப்ரல் 8) நாடாளுமன்றத்தில் பேசிய இணைப் பேராசிரியர் ஃபைஷால், யாத்ரிகர்கள் பாதுகாப்பான முறையில் புனிதப் பயணத்தை மேற்கொள்வதை உறுதிசெய்யவும் அவசரகாலத் திட்டங்களை வகுக்கவும் சிங்கப்பூர் முஸ்லிம் பயண முகவர்கள் சங்கத்துடனும் ஹஜ்ஜுப் பயண முகவர்களுடனும் இணைந்து முயிஸ் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவுக்குச் சென்றுவர நேரடி விமானச் சேவைகளைப் பயன்படுத்துவது, தடங்கல் ஏற்பட வாய்ப்பு குறைவான தரைவழிப் போக்குவரத்தைத் தேர்ந்தெடுப்பது, மதீனா, மக்கா, ஜெட்டா ஆகிய இடங்களில் புனிதப் பயணிகளின் நடமாட்டத்தை அணுக்கமாக ஒருங்கிணைப்பது ஆகியவை இவற்றில் அடங்கும் என்று உள்துறை மூத்த துணை அமைச்சருமான இணைப் பேராசிரியர் ஃபைஷால் கூறினார்.

ஹஜ் ஏற்பாடுகளின் தற்போதைய நிலை, யாத்ரிகர்களைப் பாதுகாப்பதற்கான அவசரகாலத் திட்டங்கள் குறித்து ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வான் ரிஸால் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இஸ்லாத்தின் ஐந்து முக்கியக் கடமைகளில் ஹஜ்ஜும் ஒன்று. உடல்நலமும் பண வசதியும் உடைய முஸ்லிம்கள் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது மக்காவுக்குச் சென்று இப்புனிதப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

வரும் மே மாதம் தொடங்கவுள்ள 2026க்கான ஹஜ் பயணத்திற்கு, சிங்கப்பூர் முஸ்லிம் யாத்ரிகர்களுக்காக ஒதுக்கப்பட்ட 900 இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டதாக 2025 டிசம்பரில் முயிஸ் தெரிவித்திருந்தது.

பிப்ரவரி 28 தொடங்கிய அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலால் மத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டது. இது, விமான நிறுவனங்களைப் பாதித்துள்ளதுடன், பயணத் திட்டங்களிலும் இடையூறு ஏற்படுத்தியது.

பாதுகாப்பு குறித்த கவலை, விமானச் சேவை ரத்து அல்லது புனிதப் பயணத்தில் ஏற்படும் இடையூறுகள் போன்ற காரணங்களால் தங்களது ஹஜ்ஜுப் பயணத்தை ஒத்திவைக்கும் யாத்ரிகர்களுக்கு வரும் ஆண்டுகளில் முன்னுரிமை வழங்கப்படுமா என்று டாக்டர் வான் ரிஸால் கேட்டார்.

அத்தகையச் சூழலில் பயணத்திற்கு முன்பதிவு செய்தோர் பாதிக்கப்படாமல் இருக்க, தாங்கள் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெறவோ நிதி உதவியைப் பெறவோ முடியுமா என்றும் அவர் கேட்டார்.

யாத்திரையை ஒத்திப்போடுவோருக்கு இனிவரும் ஹஜ்ஜுப் பருவங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறிய டாக்டர் ஃபைஷால், இது சவூதி அதிகாரிகளால் வழங்கப்படும் வருடாந்தர ஒதுக்கீட்டிற்கு உட்பட்டது என்றார்.

அத்தகையச் சூழலில் கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்கான சாத்தியத்தை ஆராய, சவூதி அரேபியாவில் உள்ள பயண முகவர்கள், சேவை வழங்குநர்களுடன் முயிஸ் இணைந்து செயல்படும் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
ஹஜ்ஜுயாத்திரைமுயிஸ்மத்திய கிழக்கு