ஜப்பானியப் பேரங்காடிக் குழுமமான டோன் டோன் டோன்கியில் ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிளாஸ்டிக் பைகள் கிடைக்கப்பெறுகின்றன.
திங்கட்கிழமை (மே 19) முதல் கிடைக்கப்பெறும் புதிய பைகள் சுற்றுப்புறத்துக்கு உகந்தவையாகவும் மக்கும் தன்மை கொண்டவையாகவும் உள்ளன. ஒவ்வொரு பைக்கு கட்டணம் ஐந்து காசு என்று டோன் டோன் டோன்கி தெரிவித்தது.
காலவோட்டத்தில் சொந்தமாக மக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகள், நீண்டகாலத்துக்குச் சுற்றுச்சூழல் மீதான தாக்கத்தைக் குறைக்க உதவும். இதனால் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அதேவேளையில், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்ய முடிவதாக குழுமம் விவரித்தது.
“முடியும்போதெல்லாம் தங்களது சொந்த மறுபயன்பாட்டுப் பைகளைக் கொண்டு வருமாறு வாடிக்கையாளர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று டோன் டோன் டோன்கி அதன் ஃபேஸ்புக் பதிவில் கூறியது.
சிங்கப்பூரில் 17 பேரங்காடிகளைக் கொண்டுள்ள டோன் டோன் டோன்கி, 2024 அக்டோபர் 1ஆம் தேதி பிளாஸ்டிக் பை விற்பனையை நிறுத்தியிருந்தது.
அதற்கு முன்பு, 2023 ஜூலை வரை ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வாடிக்கையாளர்கள் 10 காசு செலுத்தினர். அதன் பின்னர் ஒவ்வொரு பைக்கும் ஐந்து காசு கட்டணம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், டோன் டோன் டோன்கியின் அண்மைய அறிவிப்புக்கு இணையவாசிகள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு ஆக்ககரமான தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் வேறு சிலருக்கு உள்ளது.


