உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சியின் மத்தியில், ‘பிளாட்’ (Plaud) என்ற நிறுவனம், புதன்கிழமை (செப்டம்பர் 16) சிங்கப்பூரில் தனது ஆசிய-பசிபிக் வட்டாரத் தலைமையகத்தைத் திறந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குறிப்பெடுக்கும் தளத்தை நடத்துகிறது ‘பிளாட்’.
சிங்கப்பூரில் பொறியியல், தயாரிப்பு உருவாக்கம், வட்டாரச் செயல்பாடுகளை விரிவுபடுத்தக் குறைந்தது 20 மில்லியன் டாலர் முதலீடு செய்ய நிறுவனம் உறுதியளித்துள்ளது.
சிங்கப்பூர் நீண்டகாலமாகக் கண்டுபிடிப்புகள், வளர்ச்சிக்கு மையமாக விளங்குவதை இந்த முதலீட்டு நடவடிக்கை உறுதிப்படுத்துகிறது என்று நிறுவனம் தெரிவித்தது.
தலைமையகம் மரினா பே நிதி மையத்தில் 15,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
அந்த இடத்தில் பொறியியல், தயாரிப்பு, வாடிக்கையாளர் சேவை, செயல்பாடுகள், சந்தைப்படுத்தல், வணிகப் பிரிவுகளைச் சேர்ந்த குழுக்கள் இயங்கும்.
சீனப் பெருநிலப்பகுதி, ஜப்பானைத் தவிர்த்து மற்ற 12 சந்தைகளுக்கான பிளாட் நிறுவனத்தின் செயல்பாட்டு மையமாகச் சிங்கப்பூர் திகழ்கிறது.
சிங்கப்பூர் தவிர, ஆஸ்திரேலியா, ஹாங்காங், இந்தியா, இந்தோனீசியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பீன்ஸ், தென்கொரியா, தைவான், தாய்லாந்து, வியட்னாம் ஆகியவை இதர சந்தைகளாகும்.
2021ஆம் ஆண்டில் ‘பிளாட்’ நிறுவனம் தொடங்கப்பட்டது.
தலைமைச் செயல் அதிகாரி நேத்தன் சூ, அறிவார்ந்த சாதனங்களை உருவாக்கும் அனுபவம் கொண்ட சீன தொழிற்சாலை உரிமையாளர் சார்லஸ் லியூவுடன் இணைந்து இந்தத் துறையில் வாய்ப்புகளை ஆராயத் தொடங்கினார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் ‘பிளாட் நோட்’ என்ற ஒலிப் பதிவியை அறிமுகப்படுத்தினர். இது அழைப்புகளையும் சந்திப்புக் கூட்டங்களையும் பதிவுசெய்து, பின்னர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திச் சுருக்க உரையாக மாற்றி வழங்கும்.
சிங்கப்பூரில் பிளாட் நிறுவனத்தின் ஊழியர் எண்ணிக்கை ஒன்பது மாதங்களில் பத்திலிருந்து கிட்டத்தட்ட 100 ஆக உயர்ந்தது. இதை 150 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
வட்டாரத் தலைமையகத் திறப்பு நிகழ்ச்சியில் மின்னிலக்க மேம்பாட்டு துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் கலந்துகொண்டார்.
