தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பள்ளிச் சேர்க்கைத் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டது

2 mins read
9f0f2000-8208-41fd-905d-7805855da850
மாணவர் சேர்க்கைக்கான சிங்கப்பூர்த் தேர்வு, மதிப்பீட்டுக் கழக இணையவாசல், ஜூலை 9ஆம் தேதி தொழில்நுட்பக் கோளாற்றால் பாதிக்கப்பட்டது. - படம்: சாவ் பாவ்

மீண்டும் தாயகம் திரும்பும் சிங்கப்பூரர்கள், இங்குள்ள பள்ளிகளில் பயில்வதற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கவிருந்த தளம், ஜூலை 9ஆம் தேதி தொழில்நுட்பப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் விண்ணப்பத்தைத் தளம்வழி இனி சமர்ப்பிக்கலாம் என்றும் சிங்கப்பூர்த் தேர்வு, மதிப்பீட்டுக் கழகம் (எஸ்இஏபி) ஜூலை 10ஆம் தேதி தெரிவித்தது.

உயர்நிலை ஒன்று முதல் மூன்று வரையிலான வகுப்புகளில் சேர்வதற்கான தேர்வுகளுக்கு, சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் ஜூலை 10ஆம் தேதி காலை 10 மணி தொடங்கி ஜூலை 23ஆம் தேதி பிற்பகல் 1 மணிவரை பதிந்துகொள்ளலாம் என்று எஸ்இஏபி அதன் இணையவாசலில் குறிப்பிட்டது.

இதற்கிடையே, அனைத்துலக மாணவர்களுக்கான பள்ளிச் சேர்க்கை நடவடிக்கை (ஏஇஐஎஸ்) ஜூலை 13ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கி ஜூலை 26ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு முடிவடையும் என்று கல்வி அமைச்சு அதன் இணையத்தளத்தில் தெரிவித்தது.

இந்த ‘ஏஇஐஎஸ்’ தேர்வுகள் செப்டம்பர் 3 முதல் 5 வரை நடக்கும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

இணையவாசலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு ஜூலை 9ஆம் தேதி அதன் இணையத்தளத்தில் தெரிவித்திருந்தது.

எத்தகைய தொழில்நுட்பக் கோளாறு என்பது குறித்து அமைச்சு விவரிக்கவில்லை.

இருப்பினும், பள்ளிச் சேர்க்கைக்கான இடங்கள் இன்னமும் உள்ளன என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது.

அனைத்துலக மாணவர்கள், சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோர் 2025ஆம் ஆண்டுக்கான உயர்நிலை 1 முதல் 3 நிலைகளுக்கான இடங்களுக்குத் தகுதிபெறும் தேர்வுகளுக்குப் பதிந்துகொள்ள தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்