பிடோக் ரெசர்வோர் ரோட்டில் கிட்டத்தட்ட 20 இணையவழி ஊழியர்கள் ஜூலை 7ல் திரண்டு எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கைச் சந்தித்தனர்.
வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த முடிந்த குத்தகையாளர்களுக்கு விநியோக வேலைகள் தரப்படுவது பற்றிய அக்கறைகளை அவர்கள் எழுப்பினர்.
பல்வேறு விநியோகத் தளங்களுக்கான ‘அல்காரிதம்’ எனப்படும் படிமுறைத் தீர்வுகள் எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்தும் பேசப்பட்டது.
பிடோக் ரெசர்வோர் ரோட்டின் புளோக் 615ன் கீழ்த்தளத்தில் அந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
விநியோக வேலையை வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக ஏற்று, அவர்களது சம்பாத்தியத்தைப் பறிப்பதாகக் கூறும் குற்றச்சாட்டுகளை விவாதிக்க பணிக்குழு ஒன்றை அரசாங்கம் அறிவித்து மூன்று நாள்களுக்கு அடுத்து கலந்துரையாடல் நடந்தது.
மனிதவள அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, கிராப் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஆகியவை இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கும்.
உரிய வேலை அனுமதி இன்றி இந்த ஊழியர்கள் இவ்வாறு செய்வதால் விநியோக ஊழியர்களுக்கு நியாயமற்ற போட்டித்தன்மை ஏற்பட்டுள்ளது.
அல்ஜுனிட் குழுத்தொகுதியில் திரு சிங்கின் யூனோஸ் வட்டாரவாசிகளுடனான மக்கள் சந்திப்புக்கு முன்னதாக அந்தக் கலந்துரையாடல், இரவு மணி 7.15 முதல் 7.45 வரை நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
கலந்துரையாடலை ஏற்பாடு செய்த முன்னாள் விநியோக ஓட்டுநர் டேனி டே, 40, இதற்காக திரு சிங்கை மின்னஞ்சல்வழி தொடர்புகொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரங்களைப் பற்றித் தாம் நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்கப்போவதாக திரு சிங் கூறியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்
கலந்துரையாடல் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய திரு சிங், தற்போது தாம் கதையின் ஒருபக்கத்தை மட்டும் அறிந்துள்ளதாகவும் அதன் மற்றொரு பக்கத்தை அறிந்த பின்னரே கருத்துரைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.