பிளாசா சிங்கப்பூரா கோல்டன் வில்லேஜ் திரையரங்கு மூடவிருக்கிறது

பிளாசா சிங்கப்பூரா கோல்டன் வில்லேஜ் திரையரங்கு மூடவிருக்கிறது

1 mins read
786df364-81a6-4dc0-82f4-1980b971a01e
28 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த கோல்டன் வில்லேஜின் பிளாசா சிங்கப்பூரா திரையரங்கு, ஆகஸ்ட் 16ஆம் தேதியுடன் அதன் சேவையை நிறுத்திக்கொள்ளவிருக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பிளாசா சிங்கப்பூரா கடைத்தொகுதியில் உள்ள கோல்டன் வில்லேஜ் திரையரங்கு ஆகஸ்ட் 16ஆம் தேதியுடன் அதன் சேவைகளை நிறுத்திக்கொள்ளவிருக்கிறது.

அந்தப் பகுதியில் உள்ள கோல்டன் வில்லேஜ் திரையரங்கு 28 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது.

ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள அந்தக் கடைத்தொகுதி பெரிய அளவில் மறுசீரமைக்கப்படவிருப்பதால், 1998இல் திறக்கப்பட்ட அந்தக் கிளை மூடப்படுவதாக புதன்கிழமை (ஜூலை 1) வெளியிட்ட அறிக்கையில் கோல்டன் வில்லேஜ் தெரிவித்தது.

அங்குள்ள ஆறு திரையரங்குக் கூடங்கள் அவற்றின் இறுதித் திரைப்படக் காட்சிகளை ஆகஸ்ட் 2ஆம் தேதி திரையிடும். அதே வேளையில், மற்ற திரையரங்குக் கூடங்கள் திரையரங்கின் இறுதி நாளான ஆகஸ்ட் 16ஆம் தேதிவரை தொடர்ந்து செயல்படும்.

பிளாசா சிங்கப்பூரா கிளை மூடப்பட்ட பிறகு, சிங்கப்பூரில் மொத்தம் 16 கோல்டன் வில்லேஜ் திரையரங்குகள் எஞ்சியிருக்கும் என்று அதன் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த கோல்டன் வில்லேஜ் பேச்சாளர், மீதமுள்ள கிளைகளை மூடுவதற்கு எந்தத் திட்டமும் இல்லை என்று தெரிவித்தார்.

கோல்டன் வில்லேஜின் ஆகப் புதிய கிளை, தெம்பனிசில் உள்ள செஞ்சுரி ஸ்குவேரில் கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது.

பிளாசா சிங்கப்பூராவுக்கு அருகில் உள்ள கிளைகளில், ஆர்ச்சர்ட் ரோடு பகுதியில் உள்ள ஜிவி சினிலேய்ஷர், ஜிவி பூகிஸ், நார்த் பிரிட்ஜ் ரோடு கடைத்தொகுதியில் உள்ள ஜிவி ஃபூனான், கிரேட் வொர்ல்ட் கடைத்தொகுதியில் உள்ள ஜிவி கிராண்ட், கிச்சனர் ரோட்டில் உள்ள ஜிவி சிட்டி ஸ்குவேர் ஆகியவை அடங்கும்.

குறிப்புச் சொற்கள்