ஜோகூர் தண்ணீர் விநியோகத்தில் சதி: குற்றச்சாட்டை மறுக்கிறார் சிங்கப்பூரர்

1 mins read
b4ada12f-322d-4a05-9015-03782f1e4925
கிராம மக்களுக்கான தண்ணீர் சேவை பராமரிப்பில் சதி செய்ததாக சிங்கப்பூர் உள்ளிட்ட மூவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. - கோப்புப் படம்: ஊடகம்

ஜோகூரின் தண்ணீர் விநியோகச் சேவையில் சதி செய்ததாகத் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை 41 வயது சிங்கப்பூரர் மறுத்துள்ளார்.

டான் எங் யோங் எனப்படும் அவர் மீது பண்டார் தெங்காரா நகரின் பாசிர் இன்டானில் உள்ள கிராம மக்களுக்கான அத்தியாவசியத் தண்ணீர் சேவை பராமரிப்பில் சதிவேலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

இரு மலேசியர்களுடன் இணைந்து சதிச் செயலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டது. அவ்விரு மலேசியர்கள் மீதும் அதேபோன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அவர்களில் ஒருவர் தலைமறைவாக உள்ளதாக மலேசிய ஊடகம் கூறியது.

செப்டம்பர் 4ஆம் தேதி இரவு 8 மணிக்கும் 11.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்பட்டது.

தொழிற்சாலை கழிவுகளைக் குடிநீர்ப் பாதையில் திறந்துவிட்டதாக எழுந்த புகார் மீது விசாரணை நடத்தப்பட்டு அரசுத்தரப்பிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாக ஜோகூர் மாநில காவல்துறைத் தலைவர் எம். குமார் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டு உள்ள டான், அந்தத் தொழிற்சாலையின் இயக்குநர் என காவல்துறை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்