சிங்கப்பூரின் பன்முகத்தன்மைக்குச் சான்றாக விளங்கும் தஞ்சோங் பகார்: பிரதமர் வோங்

சிங்கப்பூரின் பன்முகத்தன்மைக்குச் சான்றாக விளங்கும் தஞ்சோங் பகார்: பிரதமர் வோங்

2 mins read
ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்திற்கு பிரதமர் வருகை
25a6241e-4e22-45a5-8173-ba4c7618d190
ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

சிங்கப்பூரின் செழுமையான பன்முகத்தன்மைக்கு நல்ல எடுத்துக்காட்டாகவும் இன நல்லிணக்கத்திற்கான நம் கடப்பாட்டின் வெளிப்பாடாகவும் தஞ்சோங் பகார் வட்டாரம் விளங்குவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் புகழாரம் சூட்டியுள்ளார்.

கியோங் செய்க் சாலையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) நடைபெற்ற சீனப் பாரம்பரிய விழாவான ‘சிஸி’ (Qixi) திருவிழாவின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் வோங், ஒரே மக்களாக சிங்கப்பூரர் என்ற உணர்வோடு இந்த விழா கொண்டாடப்பட்டதாகத் தெரிவித்தார்.

பின்னர் அச்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்திற்கும் அவர் சென்றார்.

ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங்.
ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

அங்கு, பிரதமருக்குப் பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆலயத்தில் வழிபட்ட பிரதமர், வருகையாளர்களுடனும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான கல்வி அமைச்சர் சான் சுன் சிங், பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா, கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு, வர்த்தக, தொழில் அமைச்சுகளுக்கான துணை அமைச்சர் ஆல்வின் டான், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, திருவாட்டி ஜோன் பெரேரா ஆகியோருடன் ராடின் மாஸ் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங்கும் பிரதமருடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங்
ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

பிரதமரையும் அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வரவேற்றதில் பெருமிதம் கொள்வதாகக் கூறினார் செட்டியார் கோவில் குழுமத் தலைவர் கார்பார் ராமசாமி, 64.

பல கலாசாரங்களைக் கொண்டாடுவதிலும் பல்லின நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதிலும் சிங்கப்பூரின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக பிரதமரின் வருகை அமைந்ததாக அவர் சொன்னார்.

சீனச் சமூகத்தின் கொண்டாட்டமாக இருந்தாலும் அனைத்து இன, சமயத்தைச் சேர்ந்த சிங்கப்பூரர்களும் ஒன்றுபட்ட மக்களாக வந்திருந்ததை மெச்சினார் பிரதமர்.

“சிங்கப்பூரை ஒன்றிணைந்து எப்படிச் சிறப்பாக முன்னெடுத்து செல்லமுடியும் என்பதை உங்களுடன் கலந்துரையாடி, உங்கள் கருத்துகளைக் கேட்டறிந்து, உங்களுடன் பணியாற்ற விரும்புகிறேன்,” என்றார் வெவ்வேறு தொகுதிகளில் மக்களைச் சந்தித்துவரும் பிரதமர் வோங்.

சீன வட்டார மொழி சார்ந்த குழுக்கள் ஒன்றிணைந்து முதல்முறையாக இந்தப் பாரம்பரிய திருவிழாவைக் கொண்டாடின. இரண்டாவது ஆண்டாக நடைபெற்ற இவ்விழாவில் மொத்தம் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்