தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க பிரதமர் லீ இந்தோனீசியா பயணம்

2 mins read
3dd7b5f4-88e1-42f5-b1df-db0cce03177f
இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் மாநாட்டிற்குப் பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான சிங்கப்பூர் பேராளர் குழு அங்கு செல்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆசியான் அமைப்பின் 43வது உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் லீ சியன் லூங் செவ்வாய்க்கிழமை இந்தோனீசியா செல்கிறார்.

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் மாநாட்டிற்கு சிங்கப்பூர் பேராளர் குழுவும் செல்கிறது.

இது குறித்த அறிவிப்பை பிரதமர் அலுவலகம் திங்கட்கிழமை வெளியிட்டது. இந்த ஆண்டில் இந்தோனீசியா ஏற்று நடத்தும் இரண்டாவது உச்சநிலை மாநாடு இது.

இந்தோனீசியாவின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் மின்னிலக்கம், பசுமைப் பொருளியல் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்துத் தலைவர்கள் விவாதிப்பார்கள் எனவும் ஆசியான் தொடர்ந்து ஒற்றிணைந்து எவ்வாறு செயல்படுவது குறித்து கலந்தாலோசிக்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, மியன்மார் விவகாரம்,வட்டார அனைத்துலக நிலவரம் ஆகியவை குறித்துக் கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்படும் எனவும் அது சொன்னது.

ஆஸ்திரேலியா, கனடா, சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய பங்காளி நாடுகளின் பிரதிநிதிகளையும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பிரதிநிதியையும் ஆசியான் தலைவர்கள் சந்திப்பார்கள் என்றும் பிரதமர் அலுவலகம் கூறியது.

ஆசியான் தலைவர்கள் வேறு இரண்டு கூட்டங்களிலும் பங்கேற்பார்கள். அவற்றில் முதலாவது, ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, நியூசிலாந்து, ரஷ்யா,அமெரிக்கா போன்ற நாடுகளை உள்ளடக்கிய 18வது கிழக்கு ஆசிய உச்சநிலை மாநாடு.

இரண்டாவதாக, 26வது ‘ஆசியான் பிளஸ் மூன்று’ உச்சநிலை மாநாடு. இதில் சீனா, ஜப்பான், தென்கொரியாவைச் சேர்ந்த பிரதிநிதிகளை ஆசியான் தலைவர்கள் சந்திப்பார்கள்.

இந்த மாநாட்டில் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிசும் சீனப் பிரதமர் லீ கியாங்கும் பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் லீயுடன் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், வெளியுறவு அமைச்சு அதிகாரிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் இந்தோனீசியா செல்வார்கள் எனக் கூறப்படுகிறது.

திரு லீ இந்தோனீசியா செல்வதால், துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தற்காலிக பிரதமராக இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்