தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரதமர் லீ: சிங்கப்பூர், வெளிநாட்டு இந்தியர்கள் ஒன்றிணைப்பை வலுப்படுத்தவேண்டும்

3 mins read
d3aec52e-573d-4583-8760-6727f2df27e7
சிங்கப்பூர் இந்தியச் சமூகம் சிறப்பாக செயல்படுகிறது என்று ஏப்ரல் 26ஆம் தேதி இஸ்தானாவில் நடந்த நேர்காணலில் கூறினார் பிரதமர் லீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர் அல்லாத அல்லது புதிதாக சிங்கப்பூருக்கு வரும் இந்தியர்களுக்கும் சிங்கப்பூர் இந்தியர்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் வழிகளைக் கண்டறியவேண்டும் என்றும் திறமைவாய்ந்த பல இந்தியர்கள் சிங்கப்பூரில் பணியாற்றுவது நாட்டிற்குப் பெரும் நன்மை என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

“சிங்கப்பூரில் நகரமே நாடு. அதனால், நகரத்திற்குள் ஒன்றிணைவது அவசியம். விழுமியங்கள் குறித்த புரிந்துணர்வு வேண்டும், அடையாளம் குறித்த புரிந்துணர்வு வேண்டும்,” என்று ஏப்ரல் 26ஆம் தேதி இஸ்தானாவில் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலின்போது திரு லீ வலியுறுத்தினார்.

இந்தியாவிலுள்ள ஒரு நகரம் போல சிங்கப்பூர் இல்லை என்ற திரு லீ, சிங்கப்பூரின் பழக்கவழக்கங்கள், பல்லின சமுதாயத் தொடர்புகள் போன்றவற்றை அறிந்து தாராளமாக சிங்கப்பூருக்கு ஒரு விருந்தினராக வரலாம் என்றார்.

அதே நேரத்தில் வெளிநாட்டவர்கள் வருவதன் முக்கியத்துவத்தை அறிந்து அவர்களுக்கான வசதிகளையும் விருந்தோம்பலையும் சிங்கப்பூரர்கள் வழங்குவது முக்கியம். வெளிநாட்டவர்களின் வருகைக்கான காரணங்களைப் புரிய வைத்து, அதைப் பற்றி எப்படிச் சிந்திக்கலாம் என்பதை சிங்கப்பூரர்களுக்கு போதிப்பதும் முக்கியம் என்றார் பிரதமர் லீ.

“அது ஒரு சவால். சிங்கப்பூரர்கள் வெளிநாட்டவர்களின் வருகையைக் கவனிக்கிறார்கள். ஏன் என்றால், வருகை எண்ணிக்கை சிறிதன்று. அவர்கள் மிக திறமைவாய்ந்தவர்கள். எண்ணிக்கையை நிர்வகித்து அவர்களை வரவேற்கவேண்டும்,” என்று கோரினார் திரு லீ.

இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), இந்திய மேலாண்மைக் கழகம் (ஐஐஎம்) ஆகிய தலைசிறந்த பள்ளிகளில் சேர்வது அமெரிக்காவிலுள்ள மேசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (எம்ஐடி), ஸ்டான்ஃபர்ட், ஹார்வர்ட் போன்றவற்றில் சேர்வது போன்றது என்று குறிப்பிட்ட திரு லீ, இந்தியாவிற்கு வெளியே உள்ள நகரங்களில் சிங்கப்பூரில்தான் ஆக அதிகமான ஜஐடி, ஐஐஎம் பட்டாதரிகள் உள்ளனர் என்பதையும் சுட்டினார்.

“பொருளியல் வளரவேண்டும். உலகத்தரத்தில் மேலோங்க திறமைவாய்ந்த ஊழியர்களைப் புத்தாக்கத்துடன் உருவாக்க வேண்டும்,” என்றார் பிரதமர் லீ.

சிங்கப்பூர் இந்தியச் சமூகம் நன்கு செயல்படுகிறது என்ற திரு லீ, சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) முயற்சிகளை குறிப்பிட்டு, அங்குள்ள துடிப்பான, பற்றுள்ள பலதரப்பட்ட தொண்டூழியர்களின் சிறப்பான ஈடுபாட்டையும் மெச்சினார்.

சிங்கப்பூர்ச் சமூகங்கள்

சிங்கப்பூரின் சீனச் சமூகம் ஒருபோதும் ஒன்றுபட்டதாக இருந்ததில்லை. சீனச் சமூகம் பன்முகத்தன்மை கொண்டது. பெரனாக்கான், புதிய குடியேறிகள் போன்றவர்களை உள்ளடக்கியது.

காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சமூக அமைப்புகள் அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

கடந்த காலங்களில், சீன குலமரபுச் சங்கங்கள் புதிய குடியேறிகள் குடியேறவும், வேலை தேடவும், பள்ளிகளை அமைக்கவும் உதவின. இன்று, அவை சீனாவுடனான கலாசாரம், கல்வி அல்லது வர்த்தக உறவுகளை உருவாக்க உதவலாம்.

சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற்சபை ஒவ்வொரு தவணைக்கும் புதிய இயக்குநர்களை ஈர்த்துள்ளது என்றும் அவர்களில் இளையர்களும் பாரம்பரிய நிறுவனங்களைச் சேராதவர்களும் அடங்குவர் என்றும் பிரதமர் லீ குறிப்பிட்டார்.

“அதனால்தான் சீன சமூகம் காலத்துக்கேற்ப செயல்படுகிறது,” என்று அவர் கூறினார். சிங்கப்பூருக்கான வாய்ப்புகளை உருவாக்க சமூகம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மலாய், முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை, 80 விழுக்காட்டு மலாய் மாணவர்கள் இன்று உயர்நிலைப் பள்ளிக் கல்விக்கு மேல் படிப்பதாகவும், சுமார் 20 விழுக்காடு மாணவர்கள் பல்கலைக்கழகப் பட்டம் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையிலிருந்து ஒரு பெரும் முன்னேற்றம். இது தொடர்ந்து மேம்படும் என்று அவர் சொன்னார்.

மலாய் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் விகிதமும் அதிகரித்துள்ளது.

“இந்த வெற்றிகள் அமைதியாக நடக்கின்றன, ஆண்டுக்கு ஆண்டு, சிறிது சிறிதாக, அது கவனிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால், அதைப் பற்றி பெருமைப்பட வேண்டும்,” என்றார் திரு லீ.

View post on TikTok
குறிப்புச் சொற்கள்