பிரதமர் லீ சியன் லூங்கிற்கு திங்கட்கிழமை (மே 22) காலை கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கிருமிப்பரவல் தொடங்கியதிலிருந்து அவரை கொவிட்-19 தொற்றியிருப்பது இதுவே முதல்முறை.
பணிநிமித்தமாக அண்மையில் தாம் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பிறகு தமக்கு கொவிட்-19 உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பிரதமர் லீ திங்கட்கிழமை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.
தென்னாப்பிரிக்காவுக்கும் கென்யாவுக்கும் சென்றிருந்த அவர், பொதுவாக தமது உடல்நலம் சீராக இருப்பதாகக் கூறியுள்ளார். தொற்று அறிகுறிகள் அகலும்வரை, தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகப் பிரதமர் சொன்னார்.
71 வயதாகும் திரு லீ, தம் வயதைக் கருத்தில்கொண்டு மருத்துவர்கள் தமக்கு 'பெக்ஸ்லொவிட்' எனும் கிருமி எதிர்ப்பு மருந்தைப் பரிந்துரைத்து இருப்பதாகவும் கூறினார்.
கடைசியாக கடந்த நவம்பரில் தாம் கொவிட்-19 கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதாக திரு லீ தெரிவித்தார்.
"அன்புகூர்ந்து தொடர்ந்து ஆக அண்மைய தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள். அது கடுமையான நோய் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைத்துவிடும். சிங்கப்பூரில் கொவிட்-19 நிரந்தர நோயாகிவரும் வேளையில், நாம் தொடர்ந்து பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும்," என்றார் திரு லீ.
பிரதமர் லீ மே 14 முதல் மே 16 வரை கேப் டவுனுக்கும் சென்ற புதன்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமைவரை நைரோபிக்கும் அதிகாரபூர்வ பயணங்கள் மேற்கொண்டிருந்தார்.


