மே 3ஆம் தேதி சிங்கப்பூரர்கள் வாக்களிக்கும்போது வேட்பாளர்களைத் தனிநபர்களாக மட்டும் கருதாமல் அவர்கள் பிரதிநிதிக்கும் கட்சியையும் கருத்தில்கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கேட்டுக்கொண்டுள்ளார்.
அங் மோ கியோ குழுத்தொகுதிக்கான மக்கள் செயல் கட்சியின் (மசெக) வேட்பாளர் அணியை சனிக்கிழமை (ஏப்ரல் 19) அறிமுகப்படுத்திய அவர், பாட்டாளிக் கட்சியின் தேர்தல் அறிக்கையும் தமது அரசியல் எதிர்காலமும் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
குறிப்பிட்ட வேட்பாளரை நாடாளுமன்ற உறுப்பினராக்க மக்கள் வாக்களிக்கும்போது அந்த நபருக்காக மட்டும் அந்த வாக்கு தரப்படுவதில்லை என்று திரு லீ கூறினார்.
“அவருக்குப் பின்னால் இருக்கும் கட்சிக்கும் நீங்கள் வாக்களிக்கிறீர்கள் என்பதையும் கவனத்துடன் கருதுங்கள். சிங்கப்பூருக்குச் சேவையாற்றுவதற்கு அந்தக் கட்சிக்குத் தேவைப்படும் ஆதரவுக்கும் மக்களின் ஒப்புதலுக்கும் நீங்கள் வாக்களிக்கிறீர்கள்,” என்றார் மூத்த அமைச்சர் லீ.
தனிநபர் அளவில், திறமையானவர்களைக் கொண்ட சிறந்த அணியை மசெக முன்வைத்துள்ளதாக அவர் கூறினார்.
“அதே நேரத்தில், சிங்கப்பூருக்கு மிகச் சிறந்த தலைமைத்துவத்தைத் தரவல்ல அரசாங்கத்தை அமைப்பதற்கான அணியை நாங்கள் முன்வைக்கிறோம். சிங்கப்பூரின் ஆதரவை இது பெறும் என நான் நம்புகிறேன்,” என்றார் அவர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மசெக, 32 புதுமுகங்களை வேட்பாளர்களாக நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகாலத்திற்குப் பிறகு அதிக புதுமுகங்களை மசெக களமிறக்குகிறது.
வருங்காலத்தில் அமைச்சர்களாகக்கூடிய வேட்பாளர்களை பிரதமர் லாரன்ஸ் வோங் கொண்டு வந்துள்ளதாகவும் திரு லீ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் அறிவித்துள்ளதை அடுத்து, அவரது இடத்தை நிரப்ப புதியவர் ஒருவரும் நியமிக்கப்படவேண்டும் என்று திரு லீ சொன்னார்.
“குறிப்பிட்ட ஒரு நிலையில், செல்வாக்குடன் பேசும் அமைச்சர்களைக் கண்டு சிங்கப்பூரர்கள் பழகியுள்ளனர். அதே தரத்தில் சிங்கப்பூரர்கள், நம் அமைச்சர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்,” என்றார் அவர்.
சிங்கப்பூர் தொடர்ந்து உயர்தர அரசாங்கத்தைக் கொண்டிருப்பது, பொருத்தமான நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பணியமர்த்துவதில் இருப்பதாக திரு லீ கூறினார்.