தற்போது 70களின் தொடக்கத்தில் இருக்கும் ஒரு ‘முதியவராக’, இன்றைய இளைய ஆண்களையும் பெண்களையும் பார்த்து பிரதமர் லீ சியன் லூங் பொறாமை கொள்கிறார்.
சிங்கப்பூரின் தொடக்க காலங்களில் வாழ்ந்தவர்களைக் காட்டிலும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகளும் மேம்பட்ட வாழ்க்கைத்தரமும் கிடைக்கின்றன. மூன்றாம் உலக நாட்டிலிருந்து முதல் உலக நாடாக முன்னேறிய சிங்கப்பூரின் பயணத்தில் அவர்கள் பங்குகொள்ளவில்லை. மேம்பட்ட நிலையில் தங்களது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகின்ற அவர்கள், கடின உழைப்பின்மூலம் மேம்பட்ட நிலையை எட்டலாம் என்று பிரதமர் லீ கூறினார்.
முந்திய தலைமுறையினரைக் காட்டிலும் இன்றைய இளம் தலைமுறையினர் சிறந்து விளங்க முடியும் என்று திரு லீ நம்பிக்கை தெரிவித்தார்.
“இளையர் ஒருவர் தனக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகள் குறித்து அவநம்பிக்கை கொண்டு, தான் முன்னாலேயே பிறந்திருக்கலாம் என நினைத்தால் நான் ஏமாற்றமடைவேன்.
“நான் பிற்காலத்தில் பிறந்திருக்க விரும்புகிறேன்,” என்றார் 72 வயதாகும் பிரதமர் லீ.
எதிர்காலத் தலைமுறையினர் சிறந்து விளங்குவதை உறுதி செய்ய ஒவ்வொரு தலைமுறைச் சிங்கப்பூரர்களும் கடினமாக உழைத்து வருவதாக அவர் சொன்னார்.
முன்னோடித் தலைமுறையினரும் தற்போது தங்களது 60களில் இருக்கும் மெர்டேக்கா தலைமுறையினரும் சிங்கப்பூரை உருவாக்குவதில் பல சவால்களை எதிர்கொண்டதை அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூருக்குச் சிறப்பான எதிர்காலம் உள்ளது என்ற திரு லீ, தாங்கள் தொடர்ந்து மேலும் முன்னேறலாம் என இளம் சிங்கப்பூரர்கள் நம்புவதற்குப் பல காரணங்கள் உள்ளன என்றும் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
தான் இளையராக இருந்தபோது, தம் தலைமுறையைச் சேர்ந்த மூன்று, நான்கு விழுக்காட்டினரே பல்கலைக்கழகத்திற்குச் சென்றதை அவர் சுட்டிக்காட்டினார்.
இப்போது, சிங்கப்பூரர்களில் 40 முதல் 50 விழுக்காட்டினர் இங்குள்ள ஆறு தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றுக்குச் செல்ல முடிகிறது என்றும் கிட்டத்தட்ட எல்லாருக்கும் வெளியகப் பயிற்சி அல்லது இணைப்புத் திட்டங்களுக்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கிறது என்றும் பிரதமர் சொன்னார்.
இக்கால இளையர்கள் தொழில்நுட்பத்தை எளிதில் அணுக முடிவதாகக் குறிப்பிட்ட அவர், அது அவர்களை உலகத்துடன் தொடர்புகொள்ளவும் உற்பத்தித்திறன் மிக்கவர்களாக விளங்கவும் தம் தலைமுறையினர் கேட்டிராத எல்லா வகையான வேலைகளைச் செய்யவும் வழிவகை செய்கிறது என்றார்.
“இணைய விளையாட்டுப் பயிற்றுநராக இருந்தும் பொருளீட்டி வாழலாம். பெரிய திரைக்கு முன்பாக தனித்துவமான இருக்கையில் அமர்ந்தபடி, விரல்களையும் சுட்டியையும் (மௌஸ்) கொண்டே நீங்கள் பொருளீட்டலாம். ஆதலால், இது முந்திய தலைமுறையைவிட மோசமான வாழ்க்கையெனக் கருதுகிறீர்களா? நான் அப்படி நினைக்கவில்லை,” என்றார் திரு லீ.
“அதனால், ஒரு முதியவனாக, இன்றைய இளம் ஆடவர், பெண்டிர்மீது பொறாமைப்படுகிறேன். ஏனெனில், என்னுடைய தலைமுறையில் இருந்திராத அனுகூலங்களையும் வாய்ப்புகளையும் நீங்கள் அனுபவிக்கிறீர்கள்,” என்று அவர் சொன்னார்.
சிங்கப்பூர் மூன்றாம் உலக நாடாக இருந்து முதல் உலக நாடாக உயர்ந்ததை இப்போதைய தலைமுறையினர் அனுபவிக்க முடியாது என்ற பிரதமர், விரைவான முன்னேற்றங்களால் முந்திய தலைமுறையினர் தங்களது வீடுகள், கார்கள், மற்ற பொருள்களைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள முடிந்தது என்று விளக்கினார்.
மூவறை வீட்டில் தொடங்கி, எக்சிகியூட்டிவ் வீடு அல்லது தனியார் வீட்டிற்கு மாறியவர்கள் குறித்த பல கதைகள் உண்டு. அது களிப்பூட்டும் பயணம் என்றார் திரு லீ.
அது, இன்றைய தலைமுறையினர் மேம்பட்ட நிலையில் தங்களது வாழ்வைத் தொடங்க முடிவதையும் குறிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
உலகின் எல்லா முக்கிய நகரங்களையும் ஒப்பிடும் வகையில் சிங்கப்பூரில் வாழ்க்கைத்தரம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
வளர்ந்த நாடான சிங்கப்பூரை இன்னும் விரிவுபடுத்த அதிக இடம் இல்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். ஆனாலும், சிங்கப்பூரர்கள் அண்டை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்ற அவர், பலர் அவ்வாறு செய்துவருவதையும் சுட்டினார்.
“அதே கீழ்நிலையில் நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடங்கவில்லை. ஆனால், உயர்ந்த நிலையில் வாழ்க்கையைத் தொடங்கும் உங்களுக்குத் உயர்தரமான வசிப்பிடமும் வாழ்வும் கிடைத்துள்ளது. இதனை இன்னும் மேம்படுத்திக்கொள்ள இயலுமா என்றால், முடியும் என்பதே என் பதில்,” என்பது இளையர்களுக்கான திரு லீயின் அறிவுரை.
“முன்னைப்போல் வேகமான முன்னேற்றம் இராது. ஆயினும், நீங்கள் வேகமாக வந்துவிட்டீர்கள், நீங்கள் பின்னோக்கிச் செல்லமாட்டீர்கள். இப்போதைய நிலையிலிருந்து நீங்கள் சற்று மெதுவாக உயர்வீர்கள். அதனை நோக்கி உழைத்தால், நாம் தொடர்ந்து முன்னேறலாம்,” என்றார் அவர்.
தொடர்ந்து வேலைசெய்ய விரும்பும் முதிய சிங்கப்பூரர்களின் மனக்கவலை குறித்தும் பிரதமர் லீ பேசினார்.
மற்ற வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் சிங்கப்பூரில் முதிய ஊழியர்கள் வேலை செய்ய அதிக வாய்ப்புள்ளது என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாக அவர் சொன்னார்.
சிங்கப்பூர்ப் பொருளியலுக்கு எப்போதுமே ஊழியர்கள் தேவை என்பதால், முதிய ஊழியர்களுக்கும் மூப்படையும் ஊழியர்களுக்கும் ஏற்றவாறு வேலைகளை மறுவடிவமைப்பது எப்படி என்பதை நிறுவனங்கள் ஆராய வேண்டும் என்று திரு லீ கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, தொழில்நிறுவனங்கள் சிரமங்களை எதிர்கொண்டாலும்கூட, புதிய வாய்ப்புகளுக்காக ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மூலம் ஊழியர்களைத் தயார்ப்படுத்துவதை அரசாங்கம் தொடரும் என்று அவர் கூறினார்.
“60களில் இருக்கும், ஏன் என்னைப்போல் 70களில் இருக்கும் பலரும் இன்னும் நன்கு வேலை செய்கின்றனர். உண்மையில், செய்ய ஏதேனும் இருக்கிறது என்பதால் அந்த வேலையால் மகிழ்ச்சிதான். பணம் ஈட்ட முடிகிறது என்பதோடு மட்டுமன்றி, நோக்கமுள்ளதாகவும் அது இருக்கிறது. நான் காலையில் எழும்போது, வாழ்க்கையில் நான் செய்ய ஏதேனும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்,” என்று பிரதமர் லீ சொன்னார்.

