மத்திய கிழக்குப் போரின்போது எரிசக்தி மீள்திறன் மற்றும் விநியோகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்கான அரசதந்திர முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் லாரன்ஸ் வோங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் வலியுறுத்தினர்.
அவ்விரு தலைவர்களும் ஈரானில் நிலவும் நெருக்கடி குறித்து திங்கட்கிழமை (ஏப்ரல் 20) தொலைபேசிவழி விவாதித்தனர். அந்த உரையாடல் குறித்து பிரதமர் வோங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது, அண்டை நாடுகள் என்ற முறையில் ஒரு தீர்வை எட்டுவதற்குத் தேவையான அரசதந்திர முயற்சிகளைத் தொடர்வதன் அவசியத்தையும் தாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விநியோகத் தொடர் மீள்திறனை வலுப்படுத்த சிங்கப்பூரும் மலேசியாவும் எவ்வாறு இன்னும் அணுக்கமாகப் பணியாற்றலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றார் பிரதமர்.
“இதுபோன்ற தருணங்களில் சிங்கப்பூர், மலேசியா போன்ற அண்டை நாடுகள் தொடர்ந்து ஒன்றுக்கு ஒன்று ஆதரவாக இருந்து, ஒருங்கிணைந்து செயல்படுவதே மிகவும் முக்கியம்,” என்று திரு வோங் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் நடப்பில் இருக்கும் தற்காலிகப் போர் நிறுத்தத்தைத் தாங்கள் இருவரும் வரவேற்றதாகவும் அந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு ஏற்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

