சீனப் புத்தாண்டுக்கு முந்தைய நாளான செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) சாங்கி விமான நிலையம் முனையம் 3ல் பணிபுரிவோரைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேரில் சந்தித்தார்.
அங்கு வெவ்வேறு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 150 ஊழியர்களுக்கு பரிசுப் பையும் மாண்டரின் ஆரஞ்சுப் பழங்களும் கொடுத்து புத்தாண்டு வாழ்த்துகளை அவர் தெரிவித்துக்கொண்டார்.
$10 அடங்கிய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) சிவப்புநிற உறை, என்டியுசி டோட் பை (tote bag), ஆட்டிசக் கலைஞர் வடிவமைத்த சிறு பை (pouch) ஆகியவற்றையும் அந்த ஊழியர்களுக்குப் பிரதமர் வழங்கினார்.
விமானநிலைய முன்களப் பணியாளர்களைச் சந்தித்து சீனப் புத்தாண்டு வாழ்த்தைப் பரிமாறச் சென்ற பிரதமர் வோங்குடன் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் ஆகியோரும் என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், என்டியுசி தலைவர் கே தனலெட்சுமி முதலானோர் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்களும் சென்றிருந்தனர்.
விமானப் பயணிகளைச் சோதிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த செர்டிஸ் காவற்படை அதிகாரியான ஸ்டேசியா லிம், “விழாக்காலத்தில் தங்களை பிரதமர் வோங் நேரில் வந்து சந்தித்து வாழ்த்தியது மிகவும் ஆறுதலாக இருந்தது. இது எங்களது கடமைக்குக் கிடைத்த வெகுமதி,” என்றார்.
பிரதமர் வோங்கும் தொழிற்சங்கத் தலைவர்களும் சரக்குகளையும் பயணிகளின் உடைமைகளையும் கையாளும் சேட்ஸ் (SATS) நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட 10 வெவ்வேறு குழுக்களின் ஊழியர்களை சந்தித்தனர்.
குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள், தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள், விமான நிலைய பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோரும் அவர்களுள் அடங்குவர்.
ஊழியர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் வோங், அன்றாட வேலையில் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். அப்போது, அந்த ஊழியர்களின் கடும் உழைப்புக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர், அதிர்ஷ்டத்தை வரவழைப்பதாகக் கூறப்படும் ‘லோஹெய்’ ஒன்றுகூடலில் பிரதமர் பங்கேற்றார். அதில் 68 ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
அவர்களில் ஒருவரான ஜோசப் சங், 43, பிரதமர் வோங்கை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி அளித்ததாகக் கூறினார்.
“எங்களைச் சந்திக்க முயற்சி எடுத்ததற்காக அவரைப் பாராட்டுகிறேன்,” என்றார் தனியார் வாடகை வாகன ஓட்டுநரான அவர்.
பிரதமர் வருகையில் பங்கேற்றிருந்த திரு இங் சீ மெங், அடுத்த இருபதாண்டுகளில் உலகப் பயணிகள் போக்குவரத்து இருமடங்காக உயரும் என்றார்.
விமானப் பயணத் துறைக்கு அதிகமான ஊழியர்களை ஈர்க்க, சாங்கி விமான நிலையக் குழுமம், சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) உள்ளிட்ட முத்தரப்புப் பங்காளிகளுடன் இணைந்து என்டியுசி அணுக்கமாகப் பணியாற்றும் என்றார் அவர்.