பிரதமர் லாரன்ஸ் வோங் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) செம்பவாங் குழுத் தொகுதிக்கு வருகை அளித்ததன் மூலம் எல்லாத் தொகுதிகளின் வருகையையும் அவர் முடித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், அவர் அந்தப் பணியை நிறைவுசெய்து உள்ளார்.
2024 மே மாதம் பிரதமர் பொறுப்பை ஏற்றது முதல், சிங்கப்பூர் முழுவதும் சுற்றி வந்து மக்களைச் சந்தித்த அனுபவத்தை, செம்பவாங் குழுத் தொகுதியில் நிகழ்ந்த சுகாதார விழாவில் திரு வோங் பகிர்ந்துகொண்டார்.
“கடந்த ஆண்டு முதல் வெவ்வேறு தொகுதிகளுக்கும் சென்று வந்தேன். இன்றைக்கு செம்பவாங்கில் உள்ளேன்.
“இதுதான் எனது வருகையின் கடைசித் தொகுதி. சிறந்ததொரு பயணத்தை முடித்துள்ளேன்,” என்று திரு வோங் சொன்னபோது அங்கு கூடியிருந்த குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு பதவி ஏற்றதும், எல்லாத் தொகுதிகளுக்கும் சென்று இயன்றவரை ஏராளமான குடியிருப்பாளர்களைச் சந்திக்கப்போவதாக பிரதமர் வோங் உறுதியளித்து இருந்தார்.
தமக்கு உற்சாக வரவேற்பு அளித்த செம்பவாங் மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
அருகில் உள்ள மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதியில் இருந்து எம்.பி.யாகத் தேர்ந்து எடுக்கப்பட்டவர் திரு வோங்.
தொடர்புடைய செய்திகள்
சுதந்திரம் பெற்றது முதல் நமது தேசம் எவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளது என்பதை விளக்கிய அவர், பல இடையூறுகளுக்கு இடையே சிங்கப்பூருக்கு இன்னும் சிறப்பான எதிர்காலம் உள்ளது என்றார்.
“பூசல்கள், போர்கள், நிச்சயமற்ற பொருளியல் நிலவரம், வர்த்தகப் போர் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு சவால்கள் இன்றைய உலகில் உள்ளன.
“இருப்பினும், நமது சிறிய நாட்டில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து, ஒரே மக்களாக இருப்பது அவசியம். அவ்வாறு ஒற்றுமையுடன் இருந்தால் சவால்கள் எந்த உருவில் வந்தாலும் அவற்றை நாம் வெற்றிகொள்வோம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது,” என்றார் பிரதமர்.
சிங்கப்பூர் பல கலாசாரங்களையும் பல சமயங்களையும் உள்ளடக்கிய நாடாக இருந்தபோதிலும் அதன் குடிமக்கள் அனைவரும் ஒரே குடும்பமாக உள்ளனர் என்றும் திரு வோங் தெரிவித்தார்.
“சிங்கப்பூருக்கென்று தனித்துவம் உள்ளது. நமது முஸ்லிம் நண்பர்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். நமது இந்திய நண்பர்கள் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள்.
“இன்றைக்கு நமது கிறிஸ்துவ மக்கள் ஈஸ்டர் ஞாயிறைக் கொண்டாடுகிறார்கள். இவை எல்லாம் சிங்கப்பூருக்கு மதிப்புமிக்க தருணங்கள்.
“வெவ்வேறு சமூகங்கள், வெவ்வேறு நம்பிக்கைகள், வெவ்வேறு சமயங்கள் என்று இருந்தாலும் சிங்கப்பூர் குடும்பமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுகிறோம்,” என்று பிரதமர் வோங் தமது உரையில் குறிப்பிட்டார்.