பிரதமர் லாரன்ஸ் வோங் தமது முதல் தேசிய தினப் பேரணி உரையை ஆகஸ்ட் 18ஆம் தேதி நிகழ்த்த உள்ளார்.
பேரணி அங் மோ கியோவில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (மத்திய வளாகம்) நடைபெறும் என்று ஜூலை 10ஆம் தேதி பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது.
பிரதமர் வோங், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக மே 15ஆம் தேதி பதவி ஏற்றார்.
பொதுவாக, சிங்கப்பூர் அரசியல் தொடர்பான முக்கிய நிகழ்வுகளில் தேசிய தினப் பேரணியும் ஒன்று.
முன்னாள் பிரதமர் லீ சியன் லூங், தமது 2023ஆம் ஆண்டு தேசிய தினப் பேரணி உரையின்போது $7 பில்லியன் மதிப்பிலான மாஜூலா தொகுப்புத்திட்டத்தை அறிவித்தார்.
‘இளம் முதியோர்’ என்று அவர் குறிப்பிட்ட 50 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய சிங்கப்பூரர்கள், தங்களின் ஓய்வுக்காலத் தேவைகளை நிறைவுசெய்ய இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
இத்திட்டத்துடன் முக்கிய வீடமைப்புத் திட்டங்கள் நடைமுறைக்கு வருவது குறித்தும் திரு லீ பேசியிருந்தார்.
‘பிடிஓ’ அதாவது தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளுக்கான புதிய வகைப்படுத்தல் திட்டம், 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒற்றையருக்கு மேலும் அதிக பொது வீடமைப்புத் தெரிவுகள், தற்போதைய வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டைகளில் மூத்தோருக்கு உகந்தவாறு வசதிகளை மேம்படுத்துதல் போன்றவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.