தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரதமர் வோங்: சிங்கப்பூர் அரசியல் குறித்து சிங்கப்பூரர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்

2 mins read
3324c908-4ae2-49cd-97ce-78e92d04bd08
சிங்கப்பூர்ப் பொதுத்தேர்தல் தொடர்பான வெளிநாட்டுச் சமூக ஊடகப் பதிவுகள் குறித்து எல்லாக் கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்படி பிரதமர் லாரன்ஸ் வோங் கேட்டுக்கொண்டுள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்ப் பொதுத்தேர்தல் தொடர்பாக வெளிநாட்டிலிருந்து சமூக ஊடகங்களில் இடப்பட்ட பதிவுகள் வரம்பு மீறியிருப்பதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் சாடியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து எல்லாக் கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இனத்தையும் சமயத்தையும் கடந்த ஒற்றுமை, சிங்கப்பூரின் ஆகப் பெரும் வலிமை என்பதைப் போதுமான அளவுக்கு வலியுறுத்த தம்மால் இயலாது என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.

பல்லின, பல சமய சமூகத்தின் ஆணிவேராக உள்ள இந்த ஒற்றுமை, தற்செயலாக உருவாகவில்லை என்றும் பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த சிங்கப்பூரர்களின் வலிமிகுந்த கடின உழைப்பாலும் பொறுமையுடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சியாலும் விளைந்தது என்றும் அவர் கூறினார்.

தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சில் சனிக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய திரு வோங், கடந்த சில நாள்களில், சமய அடிப்படையில் சிங்கப்பூரர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் வெளிநாட்டுத் தரப்புகளின் நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விளக்கமளித்தார்.

மலேசிய அரசியல்வாதிகள் இருவரும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் முன்னதாகத் தடுத்துவைக்கப்பட்ட முன்னாள் சிங்கப்பூரர் ஒருவரும் வெளியிட்ட அந்தப் பதிவுகள் முடக்கப்பட்டன.

ஃபேஸ்புக்கில் வெளியான இணையவழித் தேர்தல் விளம்பரங்களை வெளிநாட்டினர் சிலர் வெளியிட்டதாக உள்துறை அமைச்சும் தேர்தல் துறையும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல 25) தெரிவித்தன.

சம்பந்தப்பட்ட பதிவுகள் முடக்கப்பட்டதாகவும் அந்த அமைப்புகள் கூறின.

“சிங்கப்பூரர்களைக் குறிவைத்து அவை பதிவிடப்பட்டன. அந்தப் பதிவுகளும் சிங்கப்பூர்ச் சமூகத்தினரிடையே பரவலாகப் பகிரப்பட்டன. இது வரம்பை மீறுகிறது,” என்று பிரதமர் கூறினார்.

உள்நாட்டு விவகாரங்கள் குறித்து சிங்கப்பூரர்களுக்குள் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் வெளிநாட்டவர் அந்த வேறுபாடுகளைப் பயன்படுத்தி நம்மை பலவீனப்படுத்தவோ அவர்களது நலனை மேம்படுத்தவோ அனுமதிக்க முடியாது என்றும் அவர் சொன்னார்.

சிங்கப்பூர் அரசியல் குறித்து சிங்கப்பூரர்கள் மட்டும்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார் திரு வோங்.

இதுபோன்ற செயல்களுக்கு எதிராகச் சிங்கப்பூர் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருபக்கம் வெளிநாட்டுத் தலையீடு இருந்தபோதும், இனத்தையும் சமயத்தையும் மீண்டும் அரசியலுக்குள் புகுத்தும் முயற்சியுடன் கூடிய உள்ளூர்ப் பதிவுகளும் இணையத்தில் வலம் வருவதாகத் திரு வோங் குறிப்பிட்டார்.

“அத்தகைய செய்திகளைச் சிங்கப்பூரர்கள் பதிவிட்டாலும் அவற்றையும் நாம் நிராகரிக்கவேண்டும். இதுபோன்ற கோரிக்கையை கிறிஸ்துவ, இந்து அல்லது பௌத்த குழு விடுத்திருந்தாலும் நம் பதிலில் மாற்றமிராது,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்