நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என்ற தமது நம்பிக்கையை வெளிப்படுத்திய பிரதமர் லாரன்ஸ் வோங், அடுத்த பொதுத் தேர்தலில் அதிக பெண் வேட்பாளர்களைக் களமிறக்க எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“என்னைப் பொறுத்தவரை, குழுவில் பன்முகத்தன்மை பயனளிக்கும்,” என்ற பிரதமர் வோங் பெண் வேட்பாளர்கள் அதிகமாக களமிறக்கப்படும்போது பொதுமக்கள் அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கூறினார்.
“எனது பணிக்காலம் முழுதும் நான் ஆடவர், மாதர் இரு பிரிவினருடனும் பணிபுரிந்த காலங்களில் பயனடைந்துள்ளேன். அவர்கள் கொண்டிருந்த பல்வேறு கண்ணோட்டங்கள் சிறப்பான தீர்வுகளை எட்ட முடிந்ததுடன் முடிவுகள் எடுப்பதில் சிறப்பாக செயல்பட முடிந்தது,” என சனிக்கிழமை (ஆகஸ்ட் 31ஆம் தேதி) நடைபெற்ற மக்கள் செயல் கட்சி மாதர் அணி மாநாட்டில் விளக்கமளித்தார்.
அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவதில் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்று கூறிய பிரதமர் வோங், பாலின சமத்துவம் என்பது ஒரு பாலினத்தவர் பயனடையும்போது வேறொரு பாலினத்தவர் பாதிக்கப்பட வேண்டும் என்பதில்லை என்று சொன்னார்.
“மாதர் சமத்துவம் என்றால் ஆண்கள் குறைவாகப் பெறுவர் என்று பொருள்படாது. மாதர் சமுதாயத்தில் பலனடைந்தால் அதனால் ஆண்களுக்கு ஏற்படப்போவது நிச்சயம் இழப்புதான் என்பதில்லை,” என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், சில நாடுகளில் ஆடவர், மாதருக்கிடையேயான கருத்து வேற்றுமை வலுவாக உள்ளதாகக் கூறினார்.
கல்வி, மனநலம் போன்றவற்றில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினருக்கும் சவால்கள் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
“ஆடவர், இள வயது ஆண்கள் ஆகியோருக்கு இருக்கும் கவலைகள் சரியான முறையில் தீர்க்கப்படாவிட்டால், பின்னர் அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதுகாப்பற்ற உணர்வால் சிலர் மாதர் சமத்துவத்தை தங்களுக்கு எதிரான இயக்கமாக கருதுவர். இந்தப் போக்கு சிங்கப்பூரில் எழக்கூடாது ,” என்று அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“இதில் உண்மை என்னவென்றால், இதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்கிறோம்,” என்ற பிரதமர் லாரன்ஸ் வோங், ஆடவர், மாதர் என அனைவரும் ஒன்றாகப் பணிபுரிந்து, மணம் புரிவதுடன் குடும்பங்களை உருவாக்கி பிள்ளைகளை ஒன்றிணைந்து வளர்க்க வேண்டும் என்று சொன்னார்.

