புருணை பட்டத்து இளவரசரின் சிங்கப்பூர் பயணம் நிறைவு

புருணை பட்டத்து இளவரசரின் சிங்கப்பூர் பயணம் நிறைவு

2 mins read
42c35ab8-bdef-4209-a21c-7e321bf35800
‘இம்ப்ரெஷன்ஸ் ஆஃப் மோனெட்’ கண்காட்சியைப் பார்வையிடும் பிரதமர் வோங் (வலது), புருணைப் பட்டத்து இளவரசர் அல்-முஹ்ததீ பில்லா. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
multi-img1 of 2

புருணை பட்டத்து இளவரசர் அல்-முஹ்ததீ பில்லா சிங்கப்பூருக்கு மேற்கொண்ட ஐந்து நாள் அதிகாரத்துவப் பயணம் நிறைவடைந்துள்ளது.

புருணை பட்டத்து இளவரசர் பில்லா, 10வது சிங்கப்பூர் - புருணை இளம் தலைவர்கள் திட்டத்துக்காக (YLP) சிங்கப்பூருக்கு வருகை தந்தார். அத்திட்டம், கடந்த 10 ஆண்டுகளாக இருநாடுகளையும் சேர்ந்த அடுத்த தலைமுறைத் தலைவர்களிடையே நெருங்கிய தொடர்பை வளர்த்திருப்பதாக வெளியுறவு அமைச்சு கூறியது.

முன்னதாக, பிரதமர் லாரன்ஸ் வோங்கும் அவருடைய துணைவியாரும் பட்டத்து இளவரசர் பில்லா, அவருடைய துணைவியாரும் இளவரசியுமான பெங்கிரான் அனாக் சாரா ஆகியோருக்கு வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 13) கரையோரப் பூந்தோட்டத்தில் இரவு விருந்து அளித்தனர்.

பிரதமர் வோங், மே மாதம் பிரதமராகப் பதவியேற்ற பிறகு முதன்முறையாகச் சிங்கப்பூரில் புருணை பட்டத்து இளவரசர் பில்லாவுக்கு விருந்து அளித்தார்.

“மதிப்பிற்குரிய புருணை பட்டத்து இளவரசரும் நானும் சிங்கப்பூருக்கும் புருணைக்கும் இடையிலான சிறப்பு உறவுக்கான எங்கள் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம். இரு நாடுகளும் இணைந்து ஒத்துழைப்பு அளித்துவரும், அளிக்க வேண்டிய துறைகள் குறித்து விவாதித்தோம்,” என்று நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தனது இன்ஸ்டகிராம் பதிவில் கூறினார்.

“இரு நாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவு விழாவுக்கான முத்திரைகளையும் வெளியிட்டோம்,” என்றும் அப்பதிவில் திரு வோங் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “எங்கள் பங்காளித்துவம் தொடர்ந்து வலுவானதாகவும் முன்னோக்கி நகர்ந்து, இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் வகையில் இருக்கும் என்று நம்புகிறேன்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் வோங்கும் புருணை பட்டத்து இளவரசரும் கரையோரப் பூந்தோட்டத்தில் இருக்கும் மலர்மாடத்தில் (Flower dome) உள்ள ‘இம்ப்ரெஷன்ஸ் ஆஃப் மோனெட்’ (Impressions of Monet) கண்காட்சியையும் பார்வையிட்டனர்.

குறிப்புச் சொற்கள்