மக்கள் செயல் கட்சியின் (மசெக) புதிய தலைமைச் செயலாளராக பிரதமர் லாரன்ஸ் வோங் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிற்குப் பதிலாக அவர் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுவதாக மசெக புதன்கிழமை (டிசம்பர் 4) தெரிவித்தது.
ஆளும் கட்சியான மசெக, தனது மத்திய செயற்குழுவில் கூடுதலாக நான்கு உறுப்பினர்களை இணைத்து உள்ளது.
டெஸ்மண்ட் சூ, லாம் பின் மின், இங் சீ மெங், சிம் ஆன் ஆகியோர் அந்த நால்வர்.
இவர்களையும் சேர்த்தால், மத்திய செயற்குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரிக்கிறது.
நவம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற மத்திய செயற்குழுவின் 38வது கூட்டத்தில் கட்சித் தலைவராக ஹெங் சுவீ கியட்டும் துணைத் தலைவராக மசகோஸ் ஸுல்கிஃப்லியும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
தலைமைச் செயலாளராக லாரன்ஸ் வோங் தேர்ந்து எடுக்கப்பட்ட நிலையில், உதவித் தலைமைச் செயலாளர்களாக சான் சுன் சிங்கும் டெஸ்மண்ட் லீயும் தேர்வாயினர்.
அதேபோல, பொருளாளர் பொறுப்புக்கு கா. சண்முகமும் உதவிப் பொருளாளராக ஓங் யி காங்கும் தேர்வு பெற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
புதிய பொறுப்புகளுக்கான நியமனங்களை மசெக புதன்கிழமை அறிவித்தது.
தலைமைச் செயலக செயற்குழுவின் தலைவராக சான் சுன் சிங் அறிவிக்கப்பட்டு உள்ளார். லாரன்ஸ் வோங்கிற்குப் பதிலாக அவர் அந்தப் பொறுப்பை ஏற்கிறார்.
அந்தக் குழுவின் துணைத் தலைவராக இருந்த திரு சானுக்கு இது பதவி உயர்வு ஆகும்.