தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் பாதையின் 4ஆம் கட்ட ரயில் நிலையங்கள் திறப்பு

தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் பாதையின் 4ஆம் கட்ட ரயில் நிலையங்கள் திறப்பு

2 mins read
பிரதமர் லாரன்ஸ் வோங் ஏழு நிலையங்களைத் திறந்துவைத்தார்
c26a3074-a0ed-424f-84ce-173d284b02d5
தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் நான்காம் கட்ட ரயில் நிலையங்கள் திறப்பு விழாவின்போது சிக்லாப் நிலையத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

பிரதமர் லாரன்ஸ் வோங், தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் தடத்தின் 4ஆம் கட்டத்தின் ஏழு புதிய நிலையங்களை ஜூன் 21ஆம் தேதி காலை திறந்துவைத்தார்.

தஞ்சோங் ரூ, காத்தோங் பார்க், தஞ்சோங் காத்தோங், மரின் பரேட், மரின் டெரஸ், சிக்லாப், பேஷோர் ஆகியவை அவை.

ஜூன் 21ஆம் தேதி நண்பகல் முதல் இரவு 9 மணி வரை இந்த ரயில் நிலையங்களில் இலவசமாகப் பயணம் செய்யலாம். அவர்களுக்காக சில விளையாட்டுகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சோங் ரூ முதல் பேஷோர் வரையிலான 7 புதிய நிலையங்கள் ஜூன் 23 முதல் சேவை வழங்கும்.

தாம்சன்-ஈஸ்ட்கோஸ்ட் ரயில் பாதையின் கிழக்கு முனை பின்னர் சாங்கி விமான நிலையத்துடன் இணைக்கப்படும். இதற்கான விரிவாக்கப் பணிகளை 2030க்குள் நிறைவுசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையமும் செயல்படத் தொடங்கும்.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் மேற்கு முனை உட்லண்ட்ஸ் நார்த்தில் ஜோகூர் பாரு- சிங்கப்பூர் விரைவு ரயில் பாதையுடன் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மரின் பரேட் ரயில் நிலையத்தில் ஜூன் 21ஆம் தேதி நடைபெற்ற தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில் தடத்தின் 4ஆம் கட்டத் திறப்பு விழாவில் பிரதமர் வோங் உரையாற்றினார்.

1980களில் தாம் மரின் டெரஸ் வட்டாரத்தில் வசித்ததை அவர் நினைவுகூர்ந்தார். அப்போது தமது வீட்டுக்கு அருகில் பெருவிரைவு ரயில் நிலையம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் தடத்தின் 4ஆம் கட்டப் பாதைக்கருகே வசிக்கும் குடியிருப்பாளர்கள் இப்போது விரைவான, வசதியான பொதுப் போக்குவரத்தைக் கட்டுப்படியாகும் விலையில் பயன்படுத்த இயலும் என்று திரு வோங் கூறினார்.

இந்தப் பாதையில் மரின் பரேட்டிலிருந்து ஷென்டன் வேக்கு நேரடி ரயிலில் 20 நிமிடங்களில் செல்ல முடியும் என்பதை அவர் சுட்டினார். தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் தடத்தின் 4ஆம் கட்டப் பாதைக்கருகே 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் அமைந்திருப்பதால் மாணவர்களுக்கும் இது நன்மையளிக்கும் என்றார் அவர்.

மேலும், ஜூ சியாட், காத்தோங் உட்பட சிங்கப்பூரின் மற்ற பகுதிகளில் வசிப்போர் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிற்கு எளிதாகச் செல்ல இயலும் என்று பிரதமர் கூறினார்.

சிறப்புத் தேவையுடையோரையும் கருத்தில்கொண்டு இந்த ரயில் பாதை வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதமர், எடுத்துக்காட்டாக ரயில் நிலையங்களில் உள்ள அறிவிப்புகளில் இடம்பெறும் எழுத்துகளின் அளவு பெரிதாக இருப்பதாகவும் பார்வையற்றோருக்காகக் கூடுதலான எண்ணிக்கையில் ‘பிரெயில்’ எழுத்துகள் இடம்பெறுவதாகவும் கூறினார்.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் தடத்தின் அடுத்த கட்டமாக, பிடோக் சவுத் முதல் சுங்கை பிடோக் நிலையங்கள் வரையிலான பாதைக்கான பணிகள் 2026ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்