பிரதமர் லாரன்ஸ் வோங் இந்தியாவில் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றுள்ள திரு நரேந்திர மோடிக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஜூன் 9ஆம் தேதி எழுதிய கடிதத்தில், “கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவின் உருமாற்றத்தை வழிநடத்தி, மில்லியன்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளீர்கள்.
“உங்கள் தலைமைத்துவத்தின்கீழ் இந்தியா தொடர்ந்து வளர்ச்சியும் வளப்பமும் அடையும் என்று நம்புகிறேன்,” என்று திரு வோங் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரும் இந்தியாவும் பன்முகத்தன்மை கொண்ட நல்லுறவைப் பகிர்ந்துகொள்ளும் உத்திபூர்வ பங்காளிகள் என்று அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டுடன் இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான அரசதந்திர உறவுகளின் 60 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், இந்தப் பங்காளித்துவத்தை மேம்படுத்தவும் மின்னிலக்கமயமாதல், திறன்களை வளர்த்துக்கொள்ளல், சுகாதாரப் பராமரிப்பு போன்ற புதிய துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த அணுக்கமான ஒத்துழைப்பைத் தொடர அவர் உறுதியளித்தார்.
பிரதமர் மோடியை மீண்டும் சந்திக்கவும் அவருடனும் அவரது குழுவினருடனும் இணைந்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தப் பணியாற்றவும் ஆர்வமாக இருப்பதாகத் திரு வோங் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
திரு மோடியின் ஆரோக்கியத்திற்கும் வெற்றிக்கும் நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக்கொண்டுள்ளார்.