கலிதா ஜியா இறப்புக்குப் பிரதமர் வோங், மூத்த அமைச்சர் லீ இரங்கல்

2 mins read
a2c234dc-4581-4e71-b55c-05c87d03510a
பங்ளாதேஷின் முதல் பெண் பிரதமர் கலிதா ஜியா பேகம் தமது 80வது வயதில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) காலமானார். - படம்: இபிஏ

பங்ளாதேஷின் முதல் பெண் பிரதமர் கலிதா ஜியா பேகம் தமது 80வது வயதில் கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) காலமானார்.

அவரின் இறப்புக்குச் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) இரங்கல் தெரிவித்தனர்.

திருவாட்டி ஜியா பங்களாதே‌ஷ் அரசியலில் மிக முக்கியமான ஆளுமையாக விளங்கியவர்.

பிரதமர் வோங், பங்ளாதே‌‌ஷின் தலைமை ஆலோசகரான முகம்மது யூனசுக்கு எழுதிய கடிதத்தில் “திருவாட்டி ஜியா, பங்ளாதே‌ஷின் அரசியல் மற்றும் பொருளியல் மேம்பாட்டுக்குப் பாடுபட்டவர்,” என்று குறிப்பிட்டார்.

“பங்ளாதே‌‌‌ஷை ஜனநாயகத்தின் பாதையில் கொண்டு செல்லவும் அதன் பொருளியலை உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்லவும் முக்கியப் பங்காற்றியவர் திருவாட்டி ஜியா. பெண்களின் கல்விக்கும் வளர்ச்சிக்கும் ஆதரவாக அவர் இருந்தார்,” என்றார் பிரதமர் வோங்.

சிங்கப்பூருக்கும் பங்ளாதே‌சுக்கும் இடையிலான உறவை வலுவாக்க பல நடவடிக்கைகளைத் திருவாட்டி ஜியா எடுத்தார் என்று திரு வோங் குறிப்பிட்டார்.

மூத்த அமைச்சர் லீ, திருவாட்டி ஜியாவின் மகனான தாரிக் ர‌ஹ்மானுக்கு இரங்கல் கடிதம் எழுதினார். தற்போது திரு தாரிக் பங்ளாதே‌ஷ் தேசியக் கட்சியின் இடைக்காலத் தலைவராக உள்ளார்.

“2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார் திருவாட்டி ஜியா. அவரை வரவேற்றது ஒரு கௌரவமான நிகழ்வு,” என்று நினைவு கூர்ந்தார் மூத்த அமைச்சர் லீ.

“பல சவால்களுக்கு மத்தியில் ஆட்சியை நடத்திய திருவாட்டி ஜியா, மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதில் அதிகக் கவனம் செலுத்தினார்,” என்று திரு லீ குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்