பங்ளாதேஷ் இடைக்காலத் தலைவருக்கு சிங்கப்பூர் பிரதமர் வாழ்த்து

1 mins read
c90e1a8d-4a71-4a94-b2c0-b9ab7bbf7059
அமைதிக்கான நோபெல் பரிசு வென்ற 84 வயது முகம்மது யூனுஸ், ஆகஸ்ட் 8ஆம் தேதி பங்ளாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராகப் பதவி ஏற்றார். - படம்: ராய்ட்டர்ஸ்

பங்ளாதேஷின் இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை ஆலோசகராகப் பொறுப்பு ஏற்றுள்ள முகம்மது யூனுஸுக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் வாழ்த்துத் தெரிவித்து உள்ளார்.

டாக்டர் யூனுஸின் தலைமைத்துவத்தின்கீழ் பங்ளாதேஷில் அமைதியும் வளப்பமும் திரும்பும் என்ற நம்பிக்கைத் தமக்கு உள்ளதாக, ஆகஸ்ட் 15ஆம் தேதியிட்ட தமது வாழ்த்துக் கடிதத்தில் திரு வோங் குறிப்பிட்டு உள்ளார்.

“தலைமைத்துவ மாற்றக் காலத்தில் உங்களது இடைக்கால அரசாங்கம் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் முக்கியமான பணியில் தீர்க்கமாக ஈடுபட்டு உள்ளது. அதில் வெற்றி காண உங்களையும் அரசாங்கத்தையும் வாழ்த்துகிறேன்,” என்றும் திரு வோங் அந்தக் கடிதத்தில் எழுதி உள்ளார்.

சிங்கப்பூருக்கும் பங்ளாதேஷுக்கும் இடையில் நீண்டகாலத் தோழமை உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உள்கட்டமைப்பு, துறைமுக நிர்வாகம் போன்ற பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

“இரு நாடுகளுக்கும் இடையிலான அணுக்க உறவுகளை மேலும் பலப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்க்கிறேன்,” என்று பிரதமர் வோங் குறிப்பிட்டுள்ளார்.

அமைதிக்கான நோபெல் பரிசு வென்ற 84 வயது யூனுஸ், ஆகஸ்ட் 8ஆம் தேதி பங்ளாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராகப் பதவி ஏற்றார்.

குறிப்புச் சொற்கள்