ரயில் பயணத்தின்போது கவிநயத்தை மேம்படுத்த வழிவகுக்கிறது, ‘ரயிலில் கவிதைகள்’ இயக்கத்தின் இரண்டாம் பருவம்.
நவம்பர் 6 முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 4 வரை கூடுதலான உள்ளூர் கவிஞர்களின் கவிதைகளை ரயில் பயணங்களின்போது காணலாம்.
கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு, வட்ட ரயில் பாதைகளின் 40 ரயில்களில் மொத்தம் 145 கவிதைத் துணுக்குகள் இடம்பெறுகின்றன. ஆங்கிலக் கவிதைகள் மட்டுமன்றி, சீன, மலாய், தமிழ்க் கவிதைகளும் ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன் உள்ளன.
சென்ற ஆண்டு இந்த இயக்கத்தின்கீழ் 104 கவிதைத் துணுக்குகள் ரயில்களில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டன. இவ்வாண்டு, கூடுதலாக 50 கவிதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
சென்ற ஆண்டு தமிழ்க் கவிஞர்கள் க.து.மு.இக்பால், லதா, எம்.சேகர், மு.அ.மசூது, ஷிவ்ராம் கோபிநாத், சித்துராஜ் பொன்ராஜ், சுலோசனா கார்த்திகேசு ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன.
இவ்வாண்டு கவிஞர்கள் அ.கி.வரதராசன், கோ.இளங்கோவன், ஹரிணி, இன்பா, பிச்சினிக்காடு இளங்கோ, தா.மதிக்குமார், ந.வீ.சத்தியமூர்த்தி, நிலாகண்ணன், நூர்ஜஹான் சுலைமான், பனசை நடராஜன், பாத்தேறல் இளமாறன், ராஜூ ரமேஷ், யூசுப் ராவுத்தர் ரஜித் ஆகியோரின் கவிதைகளும் இணைக்கப்பட்டுள்ளன.
காலத்தை வெல்லும் கவிதைகள்
சிங்கப்பூர் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இங்குப் பிறந்த கவிஞர் நூர்ஜஹான் சுலைமான், 76, எழுதிய ‘சிறகு’ கவிதை புதிதாக இடம்பெறுகிறது.
“கம்போங் ஜாவாவிலிருந்த அத்தை வீட்டுக்குச் சென்று விறகு வெட்டியபோது காயமடைந்தேன். அப்போது என் அத்தை, பறவையின் சிறகை வைத்து மருந்து தடவினார். சிறு காயம்கூட நமக்கு இவ்வளவு வலியை ஏற்படுத்தும்போது, சிறகை இழந்த புறாவுக்கு எவ்வளவு வலிக்கும் எனத் தோன்றியது. அதை நினைவுகூர்ந்து 2,000ல் இக்கவிதையை எழுதினேன்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, தன் ‘தூரத்து ஆள்’ கவிதையில், தனக்கு வயதாக ஆக, தன் இளமை ‘தூரத்து ஆள்’போலத் தெரிவதாக வர்ணிக்கிறார்.
எஸ்எம்ஆர்டி நிறுவனத்தில் பணியாற்றும் கவிஞர் கோ.இளங்கோவன், இருமுறை தங்கமுனை விருது வென்றவர். ‘திரைச்சீலையும் மரக்கிளையும்’ எனும் தம் கவிதை ரயிலில் இடம்பெறுவது அவருக்குத் தனிப்பட்ட மகிழ்ச்சி அளிக்கிறது.
பாத்தேறல் இளமாறனின் ‘விண் மீன்கள்’ கவிதை, அவரின் மறைவுக்குப் பின்பும் அவரின் பெயரைச் சுமக்கிறது.
இவ்வாண்டின் கவிதைகளைத் தொகுக்கும் குழு உறுப்பினரான இன்பாவின் ‘பல்லூழிக் காலப் பெரும் பூ’, தலைமுறைகளைக் கடந்து பண்பாட்டைக் கட்டிக்காப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
தேசிய கலை மன்றம், எஸ்எம்ஆர்டி டிரெய்ன்ஸ், ஸ்டெல்லர் ஏஸ் ஆகியவை இணைந்து இம்முயற்சியை முன்னெடுத்துள்ளன. லாப நோக்கமற்ற உள்ளூர் அமைப்பான ‘சிங் லிட் ஸ்டேஷன்’ இதைத் தயாரித்துள்ளது.
வியாழக்கிழமை (நவம்பர் 6) முதல், go.gov.sg/potm இணையத்தளம் அல்லது ரயில்களில் உள்ள ‘கியூஆர்’ குறியீடு மூலம் அனைத்துக் கவிதைகளையும் அவற்றின் மொழிபெயர்ப்புகளையும் காணலாம்.
கவிதைசார்ந்த போட்டிகள்
நவம்பர் 7 முதல் 2026 பிப்ரவரி 8ஆம் தேதி வரை இயக்கத்தையொட்டி கவிதை எழுதும் போட்டியும் நடைபெறுகிறது. பொதுமக்கள், ‘எம்ஆர்டி’ நிலையங்களையும் வட்டாரங்களையும் சார்ந்த கவிதைகளைச் சமர்ப்பிக்கலாம்.
நவம்பர் 15 முதல், சிங்கப்பூரின் பெருவிரைவு ரயில் கட்டமைப்பின் மின்னிலக்க வரைபடம் ஒன்று அறிமுகமாகும். போட்டிக்காக மக்கள் சமர்ப்பிக்கும் கவிதைகளை அது காட்டும். தங்களுக்குப் பிடித்த கவிதைகளுக்கு மக்கள் வாக்களிக்கலாம். தொடக்கநிலை, உயர்நிலை, பெரியவர் என மூன்று பிரிவுகளிலும், மக்கள் அதிகமாக விரும்பும் மூன்று கவிதைகளுக்கும் ரொக்கப் பற்றுச்சீட்டுகள் பரிசுகளாக வழங்கப்படும்.
மற்றொரு போட்டியான ‘கவிதை வேட்டை’யில், தாங்கள் ரயில்களில் காணும் கவிதைகளைப் புகைப்படமாக எடுத்து பொதுமக்கள் இணையத்தில் சமர்ப்பிக்கலாம். குறிப்பாக, வட்டப் பாதையில் செல்லும் சில ரயில்கள் முழுவதிலும் கவிதைகள் இடம்பெறுகின்றன.
பிப்ரவரி 2026ல் சமூக ஊடகப் போட்டியொன்றும் துவக்கம் காணும். மக்கள் தங்கள் அபிமானக் கவிதைகளை இன்ஸ்டகிராமில் பகிர்ந்து பரிசு வெல்லலாம்.

