பொஃப்மா (POFMA) எனப்படும் இணையத்தில் வேண்டுமென்றே பொய்ச் செய்தியைப் பரப்புவதற்கு எதிரான சட்டத்தின்கீழ் ‘மெட்டா’ நிறுவனத்திற்குத் (Meta Platforms Inc.) திருத்த உத்தரவு பிறப்பிக்கும்படி உள்துறை அமைச்சு பொஃப்மா அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) அமைச்சு அதுகுறித்துத் தகவல் வெளியிட்டது.
முன்னதாக, அக்டோபர் 2ஆம் தேதி, டிஜேசி எனப்படும் ‘டிரான்ஸ்ஃபர்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலக்டிவ்’ (Transformative Justice Collective) சிங்கப்பூரில் மரணதண்டனை விதிக்கப்படுவது குறித்தும் போதைப்பொருள் கடத்துலுக்கான தண்டனை குறித்தும் தவறான தகவல்களைப் பதிவிட்டிருந்தது.
அக்டோபர் 5ஆம் தேதி டிஜேசிக்கு திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்கீழ், தவறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக அது தன் பதிவுகளில் குறிப்பிடவேண்டியது கட்டாயம்.
அக்டோபர் 6ஆம் தேதி டிஜேசி அந்த உத்தரவின்படி திருத்தங்களை வெளியிட்டது.
ஆனால், அக்டோபர் 23, 24ஆம் தேதிகளில் ஃபேஸ்புக் பயனாளர்கள் 10 பேரும் இன்ஸ்டகிராமில் 30 பேரும் அந்தப் பதிவை மீண்டும் பதிவிட்டிருந்தனர்.
இதுகுறித்து அறிந்திருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.
அவ்வாறு மறுபதிவு செய்ததன் மூலம் அந்தப் பயனாளர்கள் தவறான தகவல்களைப் பரப்பும் நோக்கில் செயல்பட்டனர் என்பதை அமைச்சு சுட்டியது. அந்தப் பதிவு தவறான தகவல்களைக் கொண்டிருப்பது குறித்து அவர்கள் அறிந்திருக்கவேண்டும் என்றும் அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
பொஃப்மா அலுவலகம் அனுப்பிய திருத்த உத்தரவின்கீழ், அந்த மறுபதிவுகளைப் பார்வையிட்ட பயனாளர்களுக்கு அதில் தவறான தகவல் இடம்பெற்றிருப்பது குறித்து எச்சரிக்கும்படி மெட்டாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்திய தகவல்களுக்கான இணைப்பையும் (https://www.gov.sg/article/factually051024) அந்தத் திருத்தப் பதிவில் குறிப்பிட வேண்டியது அவசியம்.
அரசாங்கத்தின் விளக்கத்திற்கான இணைப்பு இணைக்கப்படுவதால் அந்தத் தவறான பதிவுகளை நீக்கவேண்டியதில்லை.
பயனாளர்கள் பதிவையும் அதன் தொடர்பிலான உண்மைத் தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்த்து உண்மையை உணர அது வகைசெய்யும்.